திருவண்ணாமலை, அக்.12: திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என எஸ்பி கார்த்திகேயன் தெரிவித்தார். திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில், புதன் கிழமைதோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்வு முகாம், எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடந்தது. அதில், ஏடிஎஸ்பிக்கள் சைபர் கிரைம் எம்.பழனி, குற்றத்தடுப்புப் பிரிவு ஆர்.சவுந்தராஜன், தலைமையிடம் சிவனுபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, போலீஸ் ஸ்டேஷன்களில் அளிக்கப்பட்ட புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதில் தாதமம் ஏற்படுகிறது என அளிக்கப்பட்ட புகார்கள் மீது, உடனடியாக சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்பி உத்தரவிட்டார்.
மேலும், பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு தாமதமின்றி வழக்குப்பதிவு செய்ய வேண்டும். விசாரணை நடத்தி புகாரில் உண்மை இருக்கிறது என உறுதி செய்ததும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றார்.
இந்நிலையில், செய்யாறு அடுத்த அருகாவூர் கிராமத்தைச் சேர்ந்த ரதி என்பவர், கடந்த ஆண்டு தங்களுடைய வீடு புகுந்து தாக்கி 5 சவரன் செயின் பறித்துச்சென்ற தனது உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செய்யாறு போலீசில் புகார் அளித்ததாகவும், இதுவரை சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவில்லை எனவும் தெரிவித்தார்.
அதேபோல், களம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்றார். எனவே, இரண்டு மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
மேலும், போளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர் மீது சிறுமி அளித்துள்ள பாலியல் தொல்லை தொடர்பான புகார் மனு மீது மறு விசாரணை செய்ய வேண்டும் என மனு அளித்தார். இது தொடர்பாக, குழந்தைகள் நல குழுமத்தின் மூலம் முறையாக விசாரணை நடத்தப்படும் என எஸ்பி தெரிவித்தார். நேற்று நடந்த சிறப்பு முகாமில், 23 பேர் மனுக்களை அளித்தனர். குடும்ப நல பிரச்னைகள், நில பாகப்பிரிவினை தொடர்பான மனுக்கள், நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டது.
The post பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் எஸ்பி உத்தரவு திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் appeared first on Dinakaran.