×

பைடன் கூட்டிய மாநாட்டில் மோடி பதிலடி உலக சுகாதார அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்: தடுப்பூசி ஒப்புதல் நடைமுறையை மாற்றவும் வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘உலக சுகாதார அமைப்பில் சீர்த்திருத்தங்கள் செய்ய வேண்டும். தடுப்பூசிகளுக்கு அது ஒப்புதல் அளிக்கும் விதிமுறைகளை மாற்றி முறைப்படுத்த வேண்டும்,’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். கொரோனா பாதிப்புகள் தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உலகளாவிய காணொலி மாநாட்டை நடத்தி வருகிறார். கடந்தாண்டு செப்டம்பரில் அவர் முதல் மாநாட்டை நடத்தினார். இதைத் தொடர்ந்து, 2வது மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று காணொலியில் உரையாற்றினர்.  கொரோனா பலி தொடர்பாக உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகளவில் இந்தியாவில்தான் கடந்த 2 ஆண்டுகளில் 47 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகி இருப்பதாக தெரிவித்தது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆரம்பம் முதலே இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பலி கணக்கை கணக்கிட அது பயன்படுத்தும் கணித ஆய்வு நடைமுறை பொருத்தமாக இல்லை என்று கண்டித்தது. இந்நிலையில், நேற்றைய மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, பதிலடி கொடுத்தார். மோடி பேசுகையில், ‘‘உலகத்திலேயே மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டத்தை இந்தியா அமல்படுத்தியது. கொரோனாவால் ஏற்பட்ட சவாலை  மக்கள் சார்ந்த திட்டத்தை மையமாக வைத்து இந்தியா எதிர்கொண்டது. உலக முழுவதும் உள்ள மக்களுக்கு மருந்துகளும், தடுப்பூசிகளும் சமமான அளவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சுகாதாரம் சார்ந்த ஆபத்துகளுக்கு எதிராக, உலகம் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.  உலக சுகாதார அமைப்பில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மருந்துகளுக்கும், சிகிச்சைகளுக்கும் அது ஒப்புதல் அளிக்கும் நடைமுறைகளை முறைப்படுத்த வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை, குறிப்பாக வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்து உரிமை வழங்குவதற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும்,’’ என்றார். இவ்வாறு அவர் பேசினார்.* நேபாள டூர் பிரதமர் மோடி வரும் 16ம் தேதி நேபாளம் செல்கிறார். நேபாள பிரதமரின் அழைப்பின் பேரில் அங்கு செல்லும் பிரதமர்  மாயாதேவி கோயில், லும்பினியில் உள்ள புத்தர் ஆலயத்துக்கு சென்று வழிபடுவார் என்று ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. * நர்சுகளுக்கு பாராட்டுசர்வதேச நர்சுகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில்,‘ உலகம் சுகாதாரமாகவும் இருக்க நர்ஸ்சுகள் மிக முக்கியமான பணியாற்றுகின்றனர். மிகவும் சிக்கலான சவால் நிறைந்த பணிகளை அவர்கள் சிறப்பாக பணியாற்றுகிறார்கள்’ என்று அவர் தெரிவித்துள்ளார்….

The post பைடன் கூட்டிய மாநாட்டில் மோடி பதிலடி உலக சுகாதார அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும்: தடுப்பூசி ஒப்புதல் நடைமுறையை மாற்றவும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Bidon-convened conference ,World Health Organization ,New Delhi ,
× RELATED தீவிரவாதிகள் என்னை மனித வெடிகுண்டாக...