பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றுவோம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: பிரதமரின் வேண்டுகோளை ஏற்று 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றுவோம் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நமது பாரத நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் இந்திய தேசிய மூவர்ண கொடியை ஏற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் இந்திய சுதந்திர போராட்டத்தில் முன்னிலை வகித்தது. 1857ம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகம் தான் முதல் சுதந்திரபோராட்டம் என்று வரலாற்று குறிப்புகள் கூறுகிறது. ஆனால் அதற்கு முன்னரே 1751ம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக முழக்கமிட்டவர் புலித்தேவன் மற்றும் 1801ம் ஆண்டு போராடிய சின்னமருது, பெரியமருது. மேலும் தீரன் சின்னமலை, வீரபாண்டிய கட்டபொம்மன், மருது பாண்டியர்கள், சிவகங்கையின், வீரமங்கை வேலுநாச்சியார் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகும்.இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்று நம் முன்னோர்கள் சிந்திய ரத்தத்தாலும், வியர்வையாலும், அனுபவித்த இன்னல்களாலும், துயரங்களாலும், தியாகத்தாலும் கிடைத்தது. தமிழ் மாநில காங்கிரஸ் இயக்கத்தின் சார்பாக 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக வருகிற 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை பிரதமர் வேண்டுகோளின்படி நமது இந்திய தேசிய கொடியை அனைவரது இல்லங்களிலும் பறக்கவிட்டு நமது உள்ளத்திலும், இல்லத்திலும் உள்ள தேசப் பற்றினை பறைசாற்றுவோம். நமது ஒற்றுமையை உறுதிப்படுத்துவோம்’ என கூறப்பட்டுள்ளது….

The post பிரதமரின் வேண்டுகோளை ஏற்று அனைவரது இல்லங்களிலும் தேசிய கொடியை ஏற்றுவோம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: