பாம்பன் கடலில் கல் குவியல் ரயில் பால தூண்களுக்கு ஆபத்து: கடலரிப்பு ஏற்படுமென மீனவர்கள் அச்சம்

ராமேஸ்வரம்: புதிய ரயில் பாலம் கட்டும் பணிக்காக பாம்பன் கடலில் தனியார் நிறுவனம் கற்களை கொட்டி வைத்துள்ளது. இதனால் கடலரிப்பு  ஏற்படும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் இரட்டை வழித்தடத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பாம்பன்  கடலில் கப்பல் செல்லும் கால்வாயின் இருபுறமும் பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி முடிவுற்ற நிலையில், அடுத்தடுத்து கடலில் தூண்கள்  அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பாம்பன் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனம்,  பாம்பன் கடலில் மண்டபம் கரைப்பகுதியில் இருந்து 500  மீட்டர் தூரத்திற்கு மேல் கடலுக்குள் டன் கணக்கில் கற்களை கொட்டி அணை போல் கரை கட்டியுள்ளனர். பாம்பன் கடலில் தெற்கில் இருந்து  வடக்காகவும், வடக்கில் இருந்து தெற்கு திசையிலும் நீரோட்டம் மாறி மாறி செல்லும். அதுவும் நடுவில் கால்வாய் இருப்பதால் நீரோட்டத்தின் வேகம்  அதிகமாகவும் இருக்கும்.நீரோட்டத்தின் போக்கை தடுக்கும் வகையில் கடலில் இதுபோன்ற தடுப்பை நீண்ட தூரத்திற்கு ஏற்படுத்தினால் நீரோட்டத்தின் வேகத்தில் கடற்கரை  பகுதியில் அரிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். அதிக நீரோட்டம் கொண்ட பகுதியில் இதுபோன்ற கடலில் மேற்கொள்ளப்படும் கட்டுமான  பணிகளுக்கு தற்காலிக பாலம் அமைப்பதுதான் வழக்கத்தில் உள்ளது. பாம்பனில் கட்டப்பட்ட சாலைப்பாலத்தின் பணிகள் நடைபெற்றபோதும்,  பொருட்களை கொண்டு செல்வதற்கு தற்காலிக பாலத்தைதான் அமைத்தார்கள்.தற்போது பாம்பன் கரைப்பகுதியில் கடலில் தூண்கள் அமைக்கப்படும் பணி நடைபெற்று வரும் நிலையிலும், இதற்காக கடலில் தற்காலிக பாலம்  அமைத்துத்தான் கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறது. புதிய ரயில் பாலம் கட்டுமானப் பணியில் பாம்பன் மற்றும்  மண்டபம் கரைப்பகுதியில் இரண்டு பக்கத்திலிருந்தும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மண்டபம் கரைப்பகுதியில் மட்டும் கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்தியுள்ளதால், கரையோர அரிப்பு மட்டுமின்றி தற்போதுள்ள ரயில் பாலத்தின்  தூண்களிலும் கடல் நீரோட்டத்தினால் அதிகளவில் அரிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் ரயில்வே ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கைக்கு  விரோதமாக கடலில் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மீனவர்களும், தன்னார்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்….

The post பாம்பன் கடலில் கல் குவியல் ரயில் பால தூண்களுக்கு ஆபத்து: கடலரிப்பு ஏற்படுமென மீனவர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Related Stories: