ராசிபுரம், ஜூலை 29: விடியல் பயண திட்டத்தின் மூலம், பெண்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாக, அத்தனூர் விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பேரூராட்சி, ஆட்டையாம்பட்டி பிரிவுரோடு அருகே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் மூலம், ₹1.51 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, எம்எல்ஏ ராமலிங்கம், நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பெட்ரோல் பங்க்கை திறந்து வைத்தார். தொடர்ந்து, பணியின் போது உயிரிழந்த 25 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர், பல்வேறு வழித்தடங்களில் 10 புதிய பஸ்களை தொடங்கி வைத்து, அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், போக்குவரத்து துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பழைய பஸ்களுக்கு பதிலாக சுமார் 7,500 புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது 1,000 பழைய பஸ்கள் மாற்றப்பட்டு, புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவுப்படி, தமிழ்நாடு முழுவதும் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு இலவச விடியல் பயணத்தை, முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். போக்குவரத்து துறைக்கு ₹1,500 கோடியும், தற்போது ₹2,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவையின் மூலம் பணிக்கு செல்லும் மகளிர், சிறு வியாபாரம் செய்பவர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் 814 டவுன் பஸ்களில் 10.33 லட்சம் மொத்த பயணங்களில், மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயண சேவை மூலம், சுமார் 7.18 லட்சம் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர். இது சுமார் 69 சதவீதமாகும். தற்போது 18 சதவீத மகளிர் இலவச பஸ் பயணத்தை பயன்படுத்தி வருகிறார்கள். விடியல் பயணத்திட்டத்தில் தமிழ்நாட்டில் சுமார் 510.55 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் 60.34 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் தமிழ்நாட்டில் 75.44 லட்சம் பயணங்களும், சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் 7 லட்சம் மகளிர் பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டத்தை கர்நாடாக, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களும் செல்படுத்தி வருகின்றன.
தற்போது, நாமக்கல் முதல் சென்னைக்கு 2 பஸ்கள், நாமக்கல்-சேலம்-மதுரை வழியாக 1 பஸ், நாமக்கல்-கோயமுத்தூர் வழியாக 1 பஸ், ராசிபுரம்-சேலம்-பெங்களூரு வழியாக 2 பஸ்கள், திருச்செங்கோடு-சேலம்-சென்னை வழியாக 1 பஸ் என 7 புதிய புறநகர் பஸ்களும், நாமக்கல்-காரவள்ளி வழியாக 1 பஸ், நாமக்கல்-மோகனூர் வழியாக 1 பஸ், மற்றும் திருச்செங்கோடு-குமாரபாளையம் வழியாக 1 பஸ் என 3 டவுன் பஸ்கள் மொத்தம் 10 புதிய பஸ்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ‘நாமக்கல் மாவட்டத்திற்கு தற்போது வரை, பழைய பேருந்துகளுக்கு பதிலாக 25 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரத்தில் மலை பகுதியில் பேருந்து சேவை வழங்கப்பட்டு செம்மாண்டம்பட்டி, பெரப்பன்சோலை பகுதி பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள்,’ என்றார்.
விழாவில், சேலம் கோட்ட அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி, பொது மேலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர் துரைசாமி.
ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் சின்னுசாமி, பேரூர் செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பல்வேறு வழித்தடங்களில் 10 புதிய பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.
