பயறுவகை பயிர்களில் சாம்பல் நோய் தாக்குவதை கட்டுப்படுத்தும் முறைகள்-வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை

நீடாமங்கலம் : பயறுவகை பயிர்களில் சாம்பல்நோய் தாக்குவதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பயறு வகைப் பயிர்களில் சாம்பல் நோய் தாக்கும் அறிகுறிகள்: இலையின் மேல் பாகத்தில் வெள்ளை நிற நுண்துகள்கள் திட்டு திட்டாக இருப்பதை காணமுடியும்.நோயின் தீவிரம் அதிகமாகும் பொழுது இலைகளின் கீழ் பகுதியும் பாதிப்புக்கு உள்ளாகும். அதனால் இலைகளால் சுவாசிக்க முடியாமல் இலைகள் உதிர்ந்து விடும். நோயின் ஆரம்ப நிலையில் விதை அழுகல், நாற்று கருகல், வேரழுகல் இது போன்ற அறிகுறிகளை காண முடியும். மேலும் இலைகளில் ஒழுங்கற்ற பழுப்பு நிற புள்ளிகள் தென்படும். இந்த புள்ளிகள் நாளடைவில் ஒன்றோடொன்று இணைந்து கருகல் போன்ற தோற்றத்தையும், இலைகள் வளருவதற்கு முன்பே உதிர்ந்துவிடும். இந்த நோய் காய் பிடிக்கும் நிலையில் அதிகமாக தோன்றும். பாதிக்கப்பட்ட பயிரின் ஆணிவேரை பிரித்துப் பார்க்கும்போது உள்ளே உள்ள திசுக்கள் சிவப்பு நிறமாக மாறி இருப்பதை காணமுடியும். கட்டுப்படுத்தும் முறைகள்: சாம்பல் நோய் தென்படும் பட்சத்தில் 5 சத வேப்பங்கொட்டை கரைசல் அல்லது 3 சத வேப்ப எண்ணெய் தெளிக்கவேண்டும். மேலும் 10நாள் இடைவெளியில் இரண்டாவது முறை தெளிக்கலாம். செயற்கை பூஞ்சானக்கொல்லிகளான கார்பண்டசிம் 500 கிராம் அல்லது ஈரமான கந்தகம் 1500 கிராம் அல்லது புரப்பிகோனசோல் 500 மில்லி போன்றவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு எக்டருக்கு நோய் தென்படும் போதும் மேலும் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டாவது முறையும் தெளிக்கலாம் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்….

The post பயறுவகை பயிர்களில் சாம்பல் நோய் தாக்குவதை கட்டுப்படுத்தும் முறைகள்-வேளாண் அறிவியல் நிலைய ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: