ஏப்ரல் மாதம் மட்டும்குமரியில் 81 கோடிக்கு மதுவிற்பனை: கூல் பீருக்கு மவுசு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ.81 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. தமிழக அரசின் வருவாயில் டாஸ்மாக் கடை முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு அவ்வப்போது மது வகைகளின் விலையை அதிகப்படுத்தினாலும், விற்பனை குறைவு ஏற்படாமல் இருக்கும் ஒரே இடம் டாஸ்மாக் கடைதான். ேகாடை காலம் தொடங்கி விட்டால் உயரக மது வகைகளின் விற்பனையை விட ‘பீர்’ விற்பனை சூடுபிடிக்க தொடங்கி ஜோராக நடந்து வருகிறது. இதனால் மதிய வேளையில் டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்டம் காரணமாக டாஸ்மாக் கடையில் வருவாயும் அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் 103 டாஸ்மாக் கடைகள் இயங்கிவந்தன. இதன் மூலம் தினமும் சுமார் ரூ.2.5 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் ரூ.77 கோடிக்கு சரக்கு விற்பனையாகியது. இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் இருந்து குமரியில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இதனால் பீர் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. அதிலும் கூல் பீர் என்றால் குடிமகன்கள் மத்தியில் தனி மவுசு. அந்தவகையில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.81 கோடிக்கு மதுவகைகள் விற்பனையாகி இருக்கிறது. இது கடந்த மார்ச் மாத வருவாயை விட ரூ.4 கோடி அதிகமாகும்.

குமரியில் தற்போது கோர்ட் உத்தரவுபடி 15 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் 88 கடைகளில் மட்டுமே மது விற்பனை நடந்து வந்தது. இதனால் டாஸ்மாக் கடைகளில் வருமானம் வெகுவாக குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும் அடிக்கும் வெயில் மற்றும் குடிமகன்களின் ஆரவாரம் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது  சேல்ஸ் கூடுமே தவிர குறையவாய்ப்பில்லை என்றே கூறலாம்.

Related Stories: