நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு சொத்து சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்: ஒய்வுபெற்ற வட்டாட்சியருக்கு கடுங்காவல்

 

திருவள்ளூர்: சொத்து சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஒய்வு பெற்ற வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பலராமன் மகன் துளசிராமன். இவர் மினி பேருந்து வாங்கியுள்ளார். இந்நிலையில் சொத்து மதிப்பு சான்றிதழ் பெற கடந்த 2013-ல் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் துளசிராமன் மனு தாக்கல் செய்தார்.அப்போதைய பள்ளிப்பட்டு பெண் வட்டாட்சியராக இருந்த திலகம், ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் தான் சொத்து சான்றிதழ் வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த துளசிராமன், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ, 15 ஆயிரத்தை பள்ளிப்பட்டு வட்டாட்சியர் திலகம் என்பவரிடம் துளசிராமன் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த போலீசார் வட்டாட்சியர் திலகத்தை கையும் களவுமாகபிடித்து கைது செய்தனர்.

இது சம்பந்தமான வழக்கு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகளின் அடிப்படையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருவள்ளூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிபதி வேலரசு நேற்று தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் சொத்து சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தார், ரூ.20 ஆயிரம் அபராதமும் கட்டதவறினால் மேலும் 3 மாதம் கூடுதலாக சிறை தண்டனையும் விதிப்பதாக தீர்ப்பு வழங்கினார்.

The post நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு சொத்து சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்: ஒய்வுபெற்ற வட்டாட்சியருக்கு கடுங்காவல் appeared first on Dinakaran.

Related Stories: