×

நிலமோசடி வழக்கில் கைதானவர் திடீர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்

அம்பத்தூர்: நிலமோசடி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் நெஞ்சு வலியால் திடீரென மரணமடைந்தார். நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்பத்தூர் சித்து ஒரகடம் கே.வி.கே.சாமி தெருவை சேர்ந்தவர் சுதர்சனம்(44). இவர் மீது அம்பத்தூர் ஓம்சக்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(62), அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் நிலமோசடி புகாரளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையில் போலீசார் கடந்த ஜனவரி 5ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மாதம் 26ம் தேதி சுதர்சனத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் சுதர்சனம் கடந்த 6ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து, அவர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சுதர்சனம் நெஞ்சுவலியால் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும், சுதர்சனத்தின் இறப்புக்கு கிருஷ்ணமூர்த்தி கொடுத்த பொய் புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனின் கைது  நடவடிக்கையே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து, சுதர்சனத்தின் மகள் தீபிகா(22), தனது உறவினர்களுடன் அம்பத்தூர் உதவி ஆணையர் கனகராஜிடம் நேற்று புகார் அளித்தார். ஆனால் போலீசார் உடனடியாக எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுதர்சனத்தின் உறவினர்கள் நேற்று மாலை அம்பத்தூரில் உள்ள போலீஸ் இணை கமிஷனர் அலுவலகம் முன்பு சி.டி.எச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு, மறியல் கைவிட்டு அங்கிருந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post நிலமோசடி வழக்கில் கைதானவர் திடீர் சாவு: உறவினர்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Ambathur ,Dinakaran ,
× RELATED எலும்பியல் சிகிச்சையும் CT ஸ்கேன்களும் ஒரு பார்வை!