தூத்துக்குடி கடலில் ரசாயன கழிவுகள் கலப்பு? 1.5 கி.மீ. தூரத்துக்கு இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் கோவளம் கடற்கரையில்  1.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ஏராளமான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.  கடலில் ரசாயன கழிவுகள் கலப்பதால் மீன்கள் இறந்ததாக கூறி, ஆய்வு நடத்த மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி முத்தையாபுரம் கோவளம் கடற்கரைக்கு நேற்று காலை வழக்கம்போல் நடைபயிற்சி சென்ற பொதுமக்கள், சுமார் 1.5 கி.மீ. தூரம் ஏராளமான  மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் அதிகமாக கிடைக்கும்  மீன்களான விளமீன், கனவாய் மீன், கிளிஞ்சான் மீன், ஊளி மீன்  உள்ளிட்டவை அதிகளவில் இறந்து கிடந்தன. மீன்கள் அனைத்தும் வயிறு உப்பிய  நிலையில் கிடந்தன. மீன்வளத்துறை அதிகாரிகள் அந்த மீன்களை ஆய்விற்காக எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து கோவளம் கடற்கரை மீனவர்கள் கூறுகையில், ‘‘ஏற்கனவே இந்த பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இதுபோல மீன்கள் அதிக அளவில்  இறந்து கிடந்தன. தற்போதும் இதுபோல நடந்துள்ளது. கடந்த 6 மாத காலத்தில் மட்டும் பல கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. கடல்  நீரில் ஏதேனும் மாசு அல்லது ரசாயன கழிவுகள்  கலந்திருக்கலாம். இவற்றை  பறவைகள் கூட உண்ண வரவில்லை. இதனால் மீன்கள் ரசாயன  கழிவுகளால்தான் இறந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால் கடலில் சட்டவிரோதமாக கழிவுகள் திறந்து விடப்படுகிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்.  இதை அப்படியே விட்டால் மீன் வளமே பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்’’ என்றனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தூத்துக்குடி புதிய துறைமுகம் மீனவர் கூட்டுறவு சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், தூத்துக்குடி துறைமுக பகுதி  கடற்கரையில்  அதிக அளவில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவது தொடர்கிறது. மத்திய  கடலாராய்ச்சி கழகம், மீன்துறை அதிகாரிகள்  ஆய்வு  மேற்கொண்டதில் கடலினுள் செலுத்தப்பட்டிருக்கும் ராட்சத கழிவு நீர், குழாய்கள் வாயிலாக கடலில் கலக்கும் ரசாயன கழிவுகளால்தான்  மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதாக தெரியவந்தது. விசாரித்ததில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அங்குள்ள 2 பெரிய நிறுவனத்திற்கு கடல் நீரை  எடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால் தற்போது அந்த குழாய்களின் வழியாக ரசாயன கழிவு நீரை கடலுக்குள் செலுத்தி  விடுகின்றனர். இதனால்தான் இப்பகுதியில்  மீன்கள் டன் கணக்கில் இறந்து மிதந்து வருகின்றன. எனவே மீன் இனங்கள் மொத்தமாக அழிந்து   விடுவதற்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியமும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: