தூத்துக்குடியில் செவிலியர் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி, மே13: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நடந்த செவிலியர் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளான மே மாதம் 12ம் தேதி உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரது தன்னலமற்ற சேவையை போற்றும் விதமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்ட அரங்கில் உலக செவிலியர் தின நிகழ்ச்சி நடந்தது. அரசு மருத்துவமனை டீன் சிவக்குமார் தலைமை வகித்தார். உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, செவிலியர் கண்காணிப்பாளர் ஹெப்சி ஜோதிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு, செவிலியர் துறையில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள், 35 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய செவிலியர் கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில்: ‘செவிலியர் பணி என்பது எந்த ஒரு செயலுக்கும் ஒப்பிட்டு பார்க்க முடியாத ஒரு சேவை. தன்னலமற்ற அந்த சேவை போற்றுதலுக்குரியது. இந்த தினத்தில் செவிலியர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார். தொடர்ந்து நடனம், வினாடி-வினா போட்டி, கவிதை மற்றும் வில்லிசை, விளையாட்டு போட்டிகள் நடந்தன. விழாவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் குமரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், நர்சிங் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடியில் செவிலியர் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: