* விழிப்புணர்வில்லா மக்கள் ஆபத்தான குளியல் * நீர்நிலைகளில் கண்காணிப்பு அவசியம்பட்டிவீரன்பட்டி/ நிலக்கோட்டை, ஆக. 1:திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகேயுள்ள பெரும்பாறை, புல்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, கும்பம்மாள்பட்டி, தடியன்குடிசை, கல்லாங்கிணறு உள்ளிட்ட மலைக் கிராம பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக புல்லாவெளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் அதிகளவில் கொட்டிவருகின்றது. பெரும்பாறை அருகேயுள்ள மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் இந்த அருவி உள்ளது. இந்த அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். மலைப்பகுதிகளில் நீண்ட தூரம் ஆறாக பயணித்து இந்த இடத்தில் அருவியாக பாய்கின்றது. தற்போது இம்மலைப்பகுதியில் விட்டுவிட்டு கன மழை பெய்து வருகின்ற காரணத்தினால் அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த அருவி சுற்றிலும் மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். இந்த அருவி விழும் மலைப்பகுதிகளும், அதனைச்சுற்றி பசுமையான ஆபத்தான பள்ளத்தாக்கு பகுதிகளும் உள்ளது. இதனை அறியாமல் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகளவில் சுற்றுலா பயணிகள் அருவி பகுதியில் குவிந்தனர். மேலும் ஆபத்தாக தண்ணீர் விழும் பகுதியில் குளித்தனர். தண்ணீர் விழும் வேகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதனை உணராமல் சிலர் ஆபத்தான குளியலை தொடர்ந்த வண்ணம் உள்ளனர். தண்ணீரின் வேகமான சுழலில் சிக்கிய பலர் கடந்த காலங்களில் இழுவைத் தண்ணீர் அடித்து சென்று உயிர்பலிகள் அதிகம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் இக்காலத்தில் உரிய கவனம் எடுத்து ஆறுகளில் குளிக்க வருபவர்கள், துவைக்க வருபவர்கள் என அனைவரையும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.இந்த அருவியில் அதிகளவில் விழும் அதிகளவு தண்ணீர் காரணமாக குடகனாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் செல்லும் குடகாறு திண்டுக்கலுக்கு குடிநீர் ஆதாரமான காமராஜர் நீர் தேக்கத்திற்கு செல்கின்றது. இதனால் காமராஜர் அணையின்நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகின்றது. மேலும் ஆத்தூர், நிலக்கோட்டை போன்ற தாலுகாவில் உள்ள குளங்களுக்கு பெரியார் ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் சென்றுவருகின்றது. * நிலக்கோட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளான காமலாபுரம், பச்சைமலையன்கோட்டை, மைக்கல்பாளையம், ஓட்டுப்பட்டி, பாலம்பட்டி,கரியாம்பட்டி ஆகிய பகுதிகளில் மூன்றாவது நாளாக மாலை முதல் இரவு வரை திடீரென பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் காட்டாறுகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் , கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர் ஆபத்தை உணராமல் நீர்நிலைகளில் குளித்து வருகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதால், ஆபத்தை உணராமல் குளிப்பதும், உற்சாகமாக துவைப்பதும் அதிகமான அளவில் நடக்கிறது. பள்ளங்கள் அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளதால் எந்த இடம் மிகவும் ஆபத்தான இடம் என தெரியாமல் மாணவர்கள், சிறுவர்கள் துள்ளிக்குதித்து ஆற்றில் குளியல் போடுகின்றனர். இதனால் நீச்சல் தெரிந்தவர்களை கூட நொடிகளில் இழுத்து சென்றுவிடுகிறது. தண்ணீரில் மூழ்குபவர்கள் சில நிமிடங்களில் மூச்சுத்திணறி இறக்கும் நிலை உள்ளது. எனவே பெற்றோர், தங்களது பிள்ளைகளை மிக கவனமாக பார்ப்பதுடன் ஆற்றில் சென்று குளிக்க வேண்டாம் என அறிவுரை வழங்க வேண்டும், என்றனர். …
The post திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் மழை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் புல்லா கொட்டுது தண்ணீர் appeared first on Dinakaran.