தாவரவியல் பூங்கா நடைபாதை கடைகளுக்கு அனுமதி கோரி; கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வியாபாரிகள் முடிவு

ஊட்டி: தாவரவியல் பூங்கா நடைபாதை வியாபாரிகள் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் மற்றும் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உட்பட நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடங்களில் சாலையோரங்களில் அல்லது நடைபாதை ஓரங்களில் சிறு சிறு கடைகளை வைத்து பலரும் பிழைப்பு நடத்தி வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்லும் நிலையில், இவர்களை நம்பி பூங்கா நுழைவு வாயில் பகுதி மற்றும் நடைபாதை ஓரங்களில் சுமார் 120 பேர் சிறு சிறு கடைகள் வைத்துள்ளனர். இவர்கள், சாதாரண பூக்கள், கடலை, பழங்கள், சோளம் மற்றும் கைவினை பொருட்களை சிறிய கூடாரங்கள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் அன்றாட வருவாய் வைத்து இவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதில், சிலர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இவர்களுடன் நடைபாதைகளில் பிழைப்பு நடத்தி வந்த திபெத் அகதிகளுக்கு அதே பகுதியில் வணிக வளாகம் ஒன்று அமைத்து கொடுக்கப்பட்டது. அங்கு சுமார் 80க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அவர்கள், அந்த கடைகளை வைத்துள்ளனர். தற்போது அவர்களுக்கு இடையூறாக உள்ளதாக நகராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்ததன் பேரில், நடைபாதை வியாபாரிகள் கடைகளை ஊட்டி நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியுள்ளது. இதனால், நடைபாதை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேறு பகுதியில் கடைகள் வைத்துக் கொடுப்பதாக நகராட்சி அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆனால், நடைபாதை வியாபாரிகள் விற்பனை செய்யும் பூக்கள், பழம் மற்றும் ேசாளம் போன்றவைகளை தேடி சுற்றுலா பயணிகள் வரமாட்டார்கள் என்பதால், அதே இடத்தில் கடைகள் வைக்க அனுமதியளிக்க வேண்டும் என தொடர்ந்து மூன்று நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இவர்களின் கோரிக்கையை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தநிலையில், நேற்று பூங்கா நடைபாதைவியாபாரிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மீண்டும் அதே இடத்தில் கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை 11ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை குடும்பத்துடன் முற்றுகையிடுவது என முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து வியாபரிகளின் கோரிக்கையை ஏற்கவில்லை எனில், தாவரவியல் பூங்கா நுழை வாயில் பகுதியில் சுற்றுலா பயணிகளிடம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தவும், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவைகளை மாவட்ட நிர்வாகத்திடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டங்களையும் அடுத்தடுத்து நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து நடைபாதை வியாபாரிகள் சங்க தலைவர் ஆசிப் கூறுகையில், நாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலை ஒட்டியுள் நடைபாதைகளில் கடைகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களால் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதேபோல், திபெத் அகதிகள் வைத்துள்ள கடைகளுக்கும் பாதிப்பு இல்லை. அவர்கள் வெம்மை ஆடைகளை விற்பனை செய்கின்றனர். நாங்கள் சாதாரண பழம், கேரட், பூக்கள், ேசாளம் மற்றும் கைவினை பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். ஆனால், திபெத் அகதிகள் அளித்த புகாரின் பேரில், தற்போது ஊட்டி நகராட்சி நிர்வாகம் எங்கள் கடைகளை அகற்றி வருவது வருத்தத்தை அளிக்கிறது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக நாங்கள் கடை திறக்காததால் எங்களின் குடும்பங்கள் பாதித்துள்ளன. எனவே, மீண்டும் அதே பகுதிகளில் கடைகள் வைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை 11ம் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். அங்கேயே கடைகள் வைக்க மீண்டும் அனுமதி வழங்கவில்லை எனில், தாவரவியல் பூங்கா நுழை வாயிலில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், தொடர் போராட்டங்களையும் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார். …

The post தாவரவியல் பூங்கா நடைபாதை கடைகளுக்கு அனுமதி கோரி; கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் வியாபாரிகள் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: