தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 : கொளத்தூரில் 3-வது முறையாக களம் இறங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை: கொளத்தூரில் 3-வது முறையாக களமிறங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் மதிமுக 6 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் கட்சி 3, மனிதநேய மக்கள் கட்சி 2, தமிழக வாழ்வுரிமைக் கட்சி 1, அகில இந்திய பார்வர்டு பிளாக் 1, ஆதித்தமிழர் பேரவை 1, மக்கள் விடுதலைக் கட்சி ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. மொத்தத்தில் உதயசூரியன் சின்னத்தில் 188 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலின் 2வது நாளான இன்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர். *சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அயனாவரம் ஆண்டர்சன் சாலையில் உள்ள பழைய மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி எம்.தங்கவேலுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.2011 இல் கொளத்தூர் தொகுதியில் அதிமுகவின் சைதை துரைசாமியை தோற்கடித்தார் ஸ்டாலின். 2016 இல் 37,850 வாக்குகள் வித்தியாசத்தில் கொளத்தூர் தொகுதியில் வெற்றி கண்டார். காட்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். அதே போல் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி டி.மோகன்ராஜ்ஜிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறார். மேலும் திமுக உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்தனர். …

The post தமிழக சட்டமன்ற தேர்தல் 2021 : கொளத்தூரில் 3-வது முறையாக களம் இறங்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Related Stories: