தகுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை

 

பரமக்குடி, ஜன.6: தகுதி இல்லாமல் போலியான சான்றிதழ்களை கொண்டு வேலைக்கு சேர்ந்த பகுதி நேர ஆசிரியர்களை தவிர்த்து தகுதி உள்ள பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளனர். பரமக்குடியில் தகுதி உள்ள பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் திருப்பதி தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில், தகுதி இல்லாத பகுதி நேர ஆசிரியர்கள் போலியாக அரசை ஏமாற்றி கல்விப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தகுதியான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே தகுதியில்லாத பகுதிநேர ஆசிரியர்களை தவிர்த்து விட்டு உரிய கல்வித் தகுதி உள்ள ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தகுதி இல்லாத பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

அனைத்து மாவட்டங்களிலும் தகுதி இல்லாமல் பகுதி நேர ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டும். வாழ்வாதாரம் இன்றி பணியாற்றும் தகுதியுள்ள பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்களான மைதிலி, ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இறுதியில் அழகேசன் நன்றி கூறினார்.

The post தகுதியான பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: