×

டெலிவரி நிறுவனம் ₹50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் வேலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவு பழைய செல்போனை விற்பனை செய்த

வேலூர், ஜூலை 20: பழைய செல்போனை விற்பனை செய்த ஆன்லைன் டெலிவரி நிறுவனம் ₹50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷப்குமார், நகைக்கடை வியாபாரி. இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆன்லைனில் ₹8,190 மதிப்புள்ள செல்போனை வாங்கினார். இந்த செல்போன் ஒரு சில வாரங்களில் பழுதானது. இதனால் செல்போன் சர்வீஸ் சென்டரில் கொடுத்தபோது, ரிஷப்குமார் வைத்திருந்த செல்போன், ஒரு வருடத்திற்கு முன்பாக வாங்கப்பட்ட செல்போன் என சர்வீஸ் சென்டரில் தெரிவித்தனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரிஷப்குமார் செல்போனை டெலிவரி செய்த நிறுவனத்திடம் புகார் செய்தார். அதற்கு டெலிவரி நிறுவனத்தினர், சர்வீஸ் சென்டரில் செல்போனை சர்வீஸ் செய்ய முடியாது என கடிதம் வாங்கி தர சொல்லி உள்ளனர். பின்னர், சர்வீஸ் சென்டருக்கு சென்ற, ரிஷப்குமார் செல்போனை சர்வீஸ் செய்ய முடியாது என கடிதம் கேட்டுள்ளார். அதற்கு ஓராண்டு மேலான செல்போனை சர்வீஸ் செய்ய முடியாது, கடிதம் தர முடியாது என கூறிவிட்டனர். பின்னர் செல்போன் விற்பனை கம்பெனி மற்றும் டெலிவரி நிறுவனத்திற்கு ரிஷப்குமார் நோட்டீஸ் கொடுத்தார். அதற்கு சரியான பதில் இல்லை.

இதையடுத்து வேலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 2022ம் ஆண்டு ரிஷப்குமார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் செல்போன் பழுது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்தார். வழக்கினை நீதிபதி மீனாட்சி சுந்தரம் விசாரணை நடத்தினார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மேலும் விசாரணையில், சேவை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், செல்போனை டெலிவரி செய்த நிறுவனம் ரிஷப்குமாருக்கு செல்போன் தொகை ₹8,190 வழங்க வேண்டும். சேவை குறைபாடு காரணமாகவும், அவருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காகவும் இழப்பீடாக ₹50 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவு தொகையாக ₹25 ஆயிரத்தையும் ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கில் வழக்கறிஞர் ரஞ்சித் வாதாடினார்.

The post டெலிவரி நிறுவனம் ₹50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் வேலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட் உத்தரவு பழைய செல்போனை விற்பனை செய்த appeared first on Dinakaran.

Tags : Vellore District Consumer Court ,Vellore ,Dinakaran ,
× RELATED ரவுடிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வேலூர் மத்திய சிறை மனநல ஆலோசகர் கைது