வேலூர், ஜூலை 18: நான் முதல்வன் திட்டமத்தின் கீழ் மதிப்பீடு தேர்வை எழுதாத பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ்2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு தேர்வு கடந்த மாதம் 19, 20ம் தேதிகளில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜூன் 18, 19ம் தேதிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கும் முதற்கட்டமாக உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீட்டு தேர்வு நடந்தது. ஆனால் இதில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு மறு வாய்ப்பாக 2ம் கட்டமாக வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 4 மணி வரை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு தேர்வை நிறைவு செய்த மாணவர்களின் விவரங்கள் எமிஸ் இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்யலாம். எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கி அணைத்து மாணவர்களும் மதிப்பீடு தேர்வை நிறைவு செய்வதனை உறுதி செய்ய ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அதனை மேலும் ஊக்குவித்து, அடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டுவதுடன், தமிழில் தனித்திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாக பேசவும், நேர்முகத் தேர்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த கல்வியாண்டில் பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு மதிப்பீட்டு தேர்வு முதற்கட்டமாக கடந்த மாதம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ளாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் நான் முதல்வன் திட்டம் சிறப்பாக செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் 23, 24, 25ம் தேதிகளில் இந்த மதிப்பீட்டு தேர்வு நடக்க உள்ளது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுத அனைத்து தலைமை ஆசிரியர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post மதிப்பீடு தேர்வை எழுதாத பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வரும் 23ம் தேதி தொடங்குகிறது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் appeared first on Dinakaran.