வேலூர், ஜூலை 18: வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தொடர் மழையால் வரத்து குறைந்து, தக்காளி விலை அதிகரித்து கிலோ ₹80க்கு விற்பனையானது. தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் மழை தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீட்புபடையினர் தயார் நிலையில் உள்ளனர். அதேநேரத்தில் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளி, கேரட் விலையும் அதிகமாக உயர்ந்துள்ளது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டிற்கு ஆந்திரா, கர்நாடகா, மராட்டிய மாநிலங்கள் மற்றும் ஓசூர், ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று வேலூரை சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் இருந்து மொத்த வியாபாரிகளும், சில்லரை வியாபாரிகளும் காய்கறிகள் வாங்க வருகின்றனர். அதிகாலை 3 மணி முதல் மார்க்கெட்டில் வியாபாரம் தொடங்குவதால் அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக நேதாஜி மார்க்கெட்டில் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளியின் விலையில், ஓரிரு நாட்களில் கிலோவுக்கு ₹10 முதல் ₹20 வரை உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளி ₹80க்கும், 2ம் ரக தக்காளி கிலோ ₹60-₹70க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்தாண்டு தொடர்மழையால் விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் தக்காளி ஒரு கிலோ அதிகபட்சமாக ₹250 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டைபோல, இந்தாண்டு மழை மற்றும் அண்டை மாநிலங்களில் விளைச்சல் பாதிப்பு காரணமாக தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளியின் விலையும் கிலோவுக்கு உயர்ந்துள்ளது. தக்காளியின் வரத்து அதிகரிக்க தொடங்கினால், மட்டுமே தக்காளியின் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மாறாக தக்காளியின் வரத்து மேலும் குறைந்தால், ஒரு கிலோ தக்காளி ₹100ஐ தாண்ட வாய்ப்பு உள்ளது’ என்றனர்.
The post தக்காளி கிலோ ₹80க்கு விற்பனை தொடர் மழையால் வரத்து குறைவு வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் appeared first on Dinakaran.