ஜெயலலிதா திறந்து வைத்த எம்ஜிஆர் சிலையில் கல்வெட்டை நீக்கிய செல்லூர் ராஜூ மீது வழக்கு: மதுரை அதிமுக மாஜி எம்எல்ஏ பேட்டியால் பரபரப்பு

தனது பெயர் சேர்த்து கல்வெட்டு வைத்ததாக புகார் மதுரை: ஜெயலலிதா திறந்து வைத்த எம்ஜிஆர் சிலையில் உள்ள கல்வெட்டை நீக்கி, தன் பெயரை சேர்த்து கல்வெட்டு வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது வழக்கு தொடர உள்ளதாக அதிமுக மாஜி எம்எல்ஏ கூறியது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2001ல் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம். இவர் சொந்த செலவில் மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே அரசாணை பெற்று எம்ஜிஆர் சிலையை நிறுவினார். சிலையை கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டில் ஜெயலலிதா பெயர் மட்டுமே இடம் பெற்றிருந்தது. சிலை திறந்த நாள் முதல் தற்போது வரை ராஜாங்கம் மற்றும் இவரது மகன் தினமும் மாலை போட்டு, சுத்தம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, நேற்று முன்தினம் திடீரென ஜெயலலிதா திறந்து வைத்த கல்வெட்டை நீக்கிவிட்டு, புதிய கல்வெட்டை சிலையின் பீடத்தில் பதித்தார். அதில், சிலையை புதுப்பித்து நிறுவியவர் செல்லூர் ராஜூ என தனது பெயரை பதிவிட்டுள்ளார். தகவலறிந்து நேற்று தனது ஆதரவாளர்களுடன் எம்ஜிஆர் சிலை அருகே வந்த ராஜாங்கம், செல்லூர் ராஜூவுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார். பின்னர் ராஜாங்கம் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கடந்த 2000ம் ஆண்டு ஜெயலலிதா மதுரையில் சுற்றுப்பயணம் செய்தபோது, எம்ஜிஆர் பிறந்தநாள் வந்தது. அப்போது அவர், ‘எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட வெண்கல சிலை உள்ளதா’ என கேட்டார். நான் ‘இல்லை’ என்றேன். ‘உடனே சிலை நிறுவ ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார். அதன்படி முறையாக மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, நெடுஞ்சாலை பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் அனுமதி பெற்று, அப்போது திமுக ஆட்சியில் முறையாக விண்ணப்பித்து அரசாணை பெற்றேன். அதில் சிலையை பராமரிக்கவும், பாதுகாக்கவும் எனக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. சிலை கல்வெட்டில், ஜெயலலிதாவின் பெயரை தவிர யார் பெயரும் இருக்காது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக எம்ஜிஆர் சிலையின் பீடத்தில் இருந்தது. திடீரென, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று முன்தினம், ஜெயலலிதா திறந்து வைத்த கல்வெட்டை நீக்கி விட்டு, தனது பெயரில் கல்வெட்டை பதித்துள்ளார். அவர் அமைச்சராக இருந்தபோது, மதுரை நகரில் ஒரு எம்ஜிஆர் சிலையை கூட அவரால் திறக்க முடியவில்லை. ஜெயலலிதா திறந்து வைத்த கல்வெட்டை நீக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். உடனே அந்த கல்வெட்டை எம்ஜிஆர் சிலை பீடத்தில் செல்லூர் ராஜூ நிறுவ வேண்டும். இவரது செயல் குறித்து கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு புகார் கொடுத்துள்ளேன். கல்வெட்டை வைக்க மறுத்தால், செல்லூர் ராஜூ மீது நீதிமன்றத்தில் வழக்கு போட உள்ளேன்’’ என்றார்….

The post ஜெயலலிதா திறந்து வைத்த எம்ஜிஆர் சிலையில் கல்வெட்டை நீக்கிய செல்லூர் ராஜூ மீது வழக்கு: மதுரை அதிமுக மாஜி எம்எல்ஏ பேட்டியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: