ஜல்லி குவாரியை பொதுமக்கள் முற்றுகை அரசு இடம் ஆக்கிரமிப்பு என குற்றச்சாட்டு: வேலூர் பெருமுகையில் பரபரப்பு

வேலூர் டிச.19: வேலூர் பெருமுகையில் அரசு இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி ஜல்லி குவாரியை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் பெருமுகை ஊராட்சி பொன்னியம்மன் கோயில் தெருவில் தனியாருக்கு சொந்தமான ஜல்லி அரவை நிறுவனம் உள்ளது. இங்கு கூடுதலாக அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து இந்த இடத்தை அளவீடு செய்ய வருவாய்த்துறையினர் நேற்று வந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள், அளவீடு செய்வதை தடுத்து, அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். மேலும் ஜல்லி குவாரியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாரிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘இங்கு அரசுக்கு சொந்தமான இடத்தை ஜல்லி நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதை அகற்றி எங்களுக்கு பொது கழிவறை, அரசு பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரவேண்டும்’ என கூறினர்.
மேலும் தங்கள் பகுதியில் உள்ள இந்த ஜல்லி அரவை இயந்திரத்தால் நாங்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே இந்த ஜல்லி நிறுவனத்தை அகற்ற வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post ஜல்லி குவாரியை பொதுமக்கள் முற்றுகை அரசு இடம் ஆக்கிரமிப்பு என குற்றச்சாட்டு: வேலூர் பெருமுகையில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: