சேலம் விவிஐபியை ரகசியமாக சந்தித்த மாங்கனி எம்எல்ஏவின் பின்னணி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

‘‘குக்கர் கட்சிக்காரங்க ஆட்டம் போடுறாங்களாமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல பொன்னான ஆறு கொண்ட ஊரு இருக்குது. அங்க இருக்குற அரசு வேளாண்மை குழுக்கள்ல, குக்கர் கட்சிக்காரங்களுக்குதான் அரசோட மானியங்கள், கருவிகள் கிடைக்குதாம். ஆனால், உண்மையான விவசாயிங்களுக்கு எந்த மானியமும் கிடைக்கலையாம். காரணம், குக்கர் கட்சி பிரமுகர் தான் வேளாண் குழுவோட தலைவராக இருக்கிறார். அவரோட உத்தரவின் பேர்ல தான் கிராமங்கள்ல இருக்குற விவசாய குழுக்கள இணைக்காமல், அந்தந்த ஏரியாவுல இருக்குற குக்கர் கட்சிக்காரங்க தன்னோட வீட்டுல இருக்குற உறுப்பினருங்கள மட்டும் வேளாண் குழுவுல செயலாளர், உறுப்பினர்களாக இணைச்சிருக்காங்களாம். இதுகுறித்து பலமுறை வேளாண் அதிகாரிங்ககிட்ட விவசாயிங்க புகார் அளிச்சாங்க. அதிகாரிங்க யார் புகார் அளிக்குறாங்களோ, அந்த விவரத்தை குக்கர் கட்சிக்காரங்க கிட்ட சொல்லி விசுவாசத்த காட்டுறாங்களாம். இதனால், புகார் காகிதங்கள் குப்பை தொட்டிக்கு தான் போகுதாம். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிங்க, இனியாவது, விவசாயிகள் அனைவரையும் வேளாண் குழுக்கள்ல இணைச்சு அரசோட திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கணும். அதோட விவசாயிகளை மிரட்டும் குண்டர்களையும், முறைகேடுக்கு துணை போகும் அதிகாரிங்க மேலயும் கடும் நடவடிக்கை எடுக்கணும்னு பொன்னான ஆறு கொண்ட ஊரு விவசாயிங்க பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சேலத்துல மாம்பழம் கட்சி எம்எல்ஏ, திடீர்னு இலை கட்சி விவிஐபியை சந்தித்ததுல ஏதாவது விசேஷம் இருக்கா… இல்ல தீபாவளிக்கு ‘வாழ்த்து’ சொல்லப்போனாரா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி கூட்டணியிலிருந்து வெளிவந்த மாம்பழ கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள், கடந்த ஆட்சிய பத்தி வெளிப்படையாகவே விமர்சனம் செய்துட்டு வர்றாங்க. சமீபத்தில் கலெக்டர் ஆபீசில் நடந்த ஆய்வு கூட்டத்துல கலந்துகிட்ட அணை தொகுதி மாம்பழ எம்எல்ஏ, போன ஆட்சியில நடந்த ஊழலால் கட்டிடங்கள் எதுவுமே சரியா கட்டல. எல்லாம் தரமில்லாம இருக்குதுன்னு அனைத்து துறை அதிகாரிங்க முன்னாடியும் பகிரங்கமா விமர்சனம் செஞ்சாரு. இந்த தகவல் மாஜி விவிஐபி காதுக்கு போச்சாம். சொந்த மாவட்டத்துலயே இப்படி சொன்னா நம்மள மக்கள் எப்படி மதிப்பாங்கன்னு அதிருப்தியாகிட்டாராம். மேலும் நாம பார்த்து ஜெயிக்க வச்சவரு, நம்மளயே குற்றம் சொல்றாருனு இலைக்கட்சி நிர்வாகிங்க கிட்ட சொல்லி ஆதங்கப்பட்டிருக்காரு. இது எப்படியோ மாம்பழ தலைமையின் காதை எட்டியதாம். இந்நிலையில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. இந்த தேர்தலில் இலையின் உதவி மாம்பழத்துக்கு தேவைப்படுதாம். இந்த சூழலில், இவர்களை பகைத்து கொண்டால் சென்னை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட மாம்பழ கட்சி ஸ்டிராங்காக உள்ள மற்றும் இல்லாத பகுதிகளில் சின்னத்தை வைத்து வெற்றி பெற முடியாது. கூட்டணி முக்கியம்னு கட்சி தலைமை நினைச்சதாம். இதனால, உள்ளூர் பிரமுகர்களை அனுப்பி சேலம் விவிஐபியை சமாதானப்படுத்தி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் எப்படியாவது கூட்டணி அமைக்கணும்னு முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதனால தான், மாம்பழ கட்சி எம்எல்ஏவை அனுப்பி சேலம் விவிஐபியை சாந்தப்படுத்தும் முயற்சியில மாம்பழ தலைமை ஈடுபட்டிருக்காராம். இதுதான் ரகசியமாம். நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் பெற இந்த தந்திரமாம். இந்த தந்திரத்தை செயல்படுத்தவும் ஆரம்பிச்சுட்டாங்களாம். அதாவது, நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவருக்கு நிவாரணம் கேட்டு, இலைக்கட்சி எம்எல்ஏக்கள் கலெக்டர சந்திச்சாங்க. அப்போ எதேச்சையா அந்தப்பக்கம் போன அணை தொகுதி மாங்கனி எம்எல்ஏ, அழையா விருந்தாளியா இலைக்கட்சி எம்எல்ஏக்கள் கூட சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தாராம்… எல்லாம் கூட்டணிக்கான ரகசியம் இதுதான்னு மாங்கனி மாவட்டத்துல பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோவையில என்னதான் நடக்குது…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட சர்வே துறையில், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், செட்டில்மென்ட் தாசில்தார் அலுவலகங்கள் ஆகியவற்றில் தலைமை சர்வேயர், சர்வேயர்கள், துணை சர்வேயர்கள், உதவி சர்வேயர்கள் என 40க்கும் மேற்பட்ட சர்வேயர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களது பணியை கண்காணிக்க, உதவி இயக்குனர் அந்தஸ்தில் ஒரு அதிகாரி இருக்கிறார். இவர், தமிழ் புலவராக சித்தரிக்கப்படுகிறார். சமீபத்தில் நடந்துமுடிந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவர், அனைத்து சர்வேயர்களிடமும் கறாராக மாமூல் வசூலித்துள்ளார். ஒரே வாரத்தில் பல லட்சம் ரூபாய் சுருட்டிவிட்டாராம். இவர், ஏற்கனவே கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் தனியாக ஆபீஸ் நடத்தி வருகிறார்.ரியல் எஸ்டேட் பிரமுகர்களுக்கு சர்வே தொடர்பாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உதவிபுரிய இந்த அலுவலகம் நடத்தி வருகிறார். இதன்மூலம், ரியல் எஸ்டேட் பிரமுகர்களிடம் மாதம்தோறும் பல லட்சம் குவித்து வருகிறார். இந்த குற்றச்சாட்டு பெரிதாக வெடித்த காரணத்தால், சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனால், மூன்றே மாதத்தில், மீண்டும் கோவைக்கே வந்துவிட்டார். இவர், விரைவாக அறுவடை செய்யவேண்டும் என இலக்கு நிர்ணயித்து, படு வேகத்தில் செயல்பட்டு வருகிறார். கரன்சி மழையில் குளிக்க, பல அதிகாரிகள் இத்துறையில் தவமாய் தவமிருந்தாலும், இவர்போல் குவிக்க முடியவில்லையாம். அந்த அளவுக்கு இவர், டாப் லிஸ்டில் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.        …

The post சேலம் விவிஐபியை ரகசியமாக சந்தித்த மாங்கனி எம்எல்ஏவின் பின்னணி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: