சேலம்: சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு கொண்டு சென்ற முட்டை போண்டாவை சோதனை செய்ததால் வார்டனுக்கும் கேன்டீன் வார்டனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சேலம் மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சிறை கேன்டீன் மூலமாக சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு கைதிகளின் பெயரில் புதிய கணக்கு துவங்கப்படும். உறவினர்கள் கொடுக்கும் பணம் அவர்களின் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளப்படும். அவர்கள் கேட்கும் பொருட்களுக்கான டோக்கன் வழங்கப்படும். இதனை கொடுத்து கேன்டீனில் உணவு பொருட்களை வாங்கி சாப்பிடலாம். முட்டை போண்டா, வாழைக்காய் பஜ்ஜி, மெதுவடை போன்றவை விநியோகம் செய்யப்படும். சிறை கேன்டீனை நடத்தும் வார்டன், சிறை வளாகத்தில் இவற்றை தயார் செய்து, சிறைக்குள் கொண்டு செல்வார். இவ்வாறு நேற்றுமுன்தினம் காலை 11 மணிக்கு கேன்டீனை நடத்தி வரும் வார்டன், முட்டை போண்டா வகைகளை எடுத்துக்கொண்டு சிறைக்குள் சென்றுள்ளார். அங்கிருந்த வார்டன், முட்டை போண்டா வகைகளை சோதனை செய்தார். இதனால் கேன்டீன் வார்டன் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அதற்கு அவர், தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளே செல்வதாக குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. அதனால்தான் சோதனை போட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு சூழ்நிலை உருவானது. சக வார்டன்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதையடுத்து இருவரும் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரின் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இருதரப்பு புகாரையும் கேட்ட சிறை அதிகாரி, இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறி இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினார்….
The post சேலம் மத்திய சிறையில் முட்டை போண்டாவை சோதனை செய்ததால் வார்டன்கள் மோதல்: கண்காணிப்பாளர் விசாரணை appeared first on Dinakaran.