செம்பனார்கோயில் பகுதியில் குறுவை நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம்

செம்பனார்கோயில், ஜூன் 25: செம்பனார்கோயில் பகுதியில் குறுவை நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், வடகரை, திருக்கடையூர், சங்கரன்பந்தல், தில்லையாடி, காழியப்பநல்லூர், பொறையாறு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், நடப்பு ஆண்டு குறுவை நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு சில பகுதிகளில் சாகுபடிக்கு வயலை பக்குவப்படுத்தும் பணியும், நடவு பணியும் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் குறுவை சாகுபடி பணி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கியுள்ள நிலையில் கருவாழைக்கரை, கஞ்சாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் சில வயல்களில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து குறுவை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கூறுகையில், முன்பு பெரும்பாலும் ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போகம் நடைபெற்றது. ஆனால் இன்றைய கால சூழ்நிலை காரணமாக சம்பா, குறுவை சாகுபடி மட்டுமே நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மட்டும் தாளடி சாகுபடியும் நடைபெறுகிறது. தற்போது குறுவை பருவம் என்பதால் அதற்கான பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். கடுமையாக வெயில் சுட்டெரித்தாலும் அதனை பாராமல் உழவு பணி மேற்கொள்கிறோம். போர் செட்டு மூலம் தண்ணீர் பாய்ச்சி நடவு பணி செய்து வருகிறோம். நடவு முடிந்த பின்னர் அதற்கு மேலுரம் தெளித்து நெற்பயிரை பாதுகாத்து நல்ல மகசூல் கிடைக்கும் வரை பாடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post செம்பனார்கோயில் பகுதியில் குறுவை நெல் நடவு பணியில் விவசாயிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: