×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை பருவ மழைக்கு முன் முடிக்க திட்டம்: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை வடகிழக்கு  பருவ மழைக்கு முன்பாக முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பருவ மழைக்கு  முன்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மண்டலங்களிலும் உள்ள  மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 716 கி.மீ நீளமுள்ள  மழைநீர் வடிகால்களில் ரூ.9.96 கோடி மதிப்பீட்டில்  தூர்வாரும் பணிகள்  நடைபெற்று வருகிறது. மண்டலங்கள் மூலமாக நடைபெறும் இப்பணியில் ஈடுபடும்  தொழிலாளர்களுக்கு கையுறை, முகக்கவசம், பிரத்யேக காலணிகள் மற்றும் ஏனைய  பாதுகாப்பு உபகரணங்களுடன் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு, அவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும்,  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் எச்சரிக்கை பலகைகள் பணி  நடைபெறும் இடங்களில் வைக்கப்படுகிறது.இவ்வாறு தூர்வாரப்படும்  கழிவுகள், சாலையில் குவித்து வைக்காமல் உடனுக்குடன் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு எடுத்துச்  செல்லப்பட்டு அப்புறப்படுத்தப்படுகிறது. இதுவரை சென்னை மாநகராட்சிக்கு  உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் 76 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள்  தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளது.  அதன்படி, நேற்று அண்ணாநகர் மண்டலம் வார்டு 106 நெல்சன் மாணிக்கம் சாலை, இந்திரா நகர், கோடம்பாக்கம் குப்புசாமி தெரு, தண்டையார்பேட்டை, சென்ட்ரல் அவென்யூ சாலை, சோழிங்கநல்லூர் வி.ஜி.பி அவென்யூ விரிவு சாலை, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட சுவாமிநாதன் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது. மீதமுள்ள பகுதிகளில் வடிகால்களை தூர்வாரும் பணிகளை வடகிழக்கு  பருவமழைக்கு முன்னதாக, அதாவது அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்க  திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணியை பருவ மழைக்கு முன் முடிக்க திட்டம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipality ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...