×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வந்த செய்தி தவறானது: பூங்கா இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என்று உயிரியல் பூங்கா இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காணொலி காட்சி மூலமாக ஆஜரான உயிரியல் பூங்கா இயக்குனர் ஆஷிஷ் குமார்  வத்சவா, பல்வேறு பகுதிகளில் கைப்பற்றப்பட்ட 1830 கிலோ யானை தந்தங்கள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள கிட்டங்கியில் பத்திரப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. ஒரு கிலோ எடையை கொண்ட இரண்டு துண்டுகள் மட்டும் ஒப்பந்த பணியாளரால் திருடப்பட்டது. பிறகு அதுவும் மீட்கப்பட்டது. 1000 கிலோ யானை தந்தம் திருடப்பட்டதாக வெளியான செய்தி தவறு என்றார். இதை கேட்ட நீதிபதிகள், பல ஆண்டுகளாக இந்த யானை தந்தங்கள் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது.

அவற்றை அழிப்பதற்கான நடைமுறை என்ன என்று கேட்டனர். இதற்கு காணொலி காட்சி மூலமாக ஆஜராகி இருந்த தலைமை வன பாதுகாவலர் னிவாஸ், யானை தந்தங்களை அழிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை ஒன்றிய அரசு விலக்கிவிட்ட காரணத்தினால், குழு அமைத்து இந்த யானை தந்தங்கள் அழிக்கப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து, வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள யானை தந்தங்களை கணக்கிட்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி அழித்து, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வந்த செய்தி தவறானது: பூங்கா இயக்குனர் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Park ,CHENNAI ,Chennai High Court ,Vandalur Zoo, Chennai ,High Court ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள...