தென்காசி, ஆக.8: செங்கோட்டை புதூர் பேரூராட்சிக்குட்பட்ட பூலாங்குடியிருப்பில் குடிநீர் சீராக வழங்க வலியுறுத்தி நேற்று அப்பகுதியைச் சேர்ந்த 2 மற்றும் 6வது வார்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பூலாங்குடியிருப்பு பாறையடி கிணற்றிலிருந்து சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு 40 வீடுகளுக்கு கிணற்று குடிநீர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு குடிநீர் இணைப்பு வேண்டி தேவைப்படுபவர்கள் பேரூராட்சியிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பம் கொடுத்துள்ளோம். ஆனால் புதிய கிணற்று குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட மாட்டாது என்பது தெரிய வருகிறது. மேலும் புதூர் பேரூராட்சியில் பணிபுரியும் ஒருவருக்கும், முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் கிணற்று குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி அன்று கிணற்று குடிநீர் இணைப்பு வேண்டி 16 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளோம். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எங்கள் பகுதியில் சொந்த பணத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தும் பாறை பகுதியாக இருப்பதால் குடிநீர் கிடைப்பதில்லை. எனவே புதூர் பேரூராட்சி மூலம் மாற்று இடத்தில் போர்வெல் அமைத்து குடிநீர் விண்ணப்பித்த மனுதாரர்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு போர்வெல் மூலம் வழங்க வேண்டும். அதற்கான அரசு நிர்ணயித்த கட்டண தொகையையும் கட்ட சம்மதிக்கிறோம். மேலும் பேரூராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் நாள் ஒன்றுக்கு 5 குடம் மட்டும் எங்களுக்கு கிடைக்கிறது. இது சாதாரண நுகர்வோருக்கு போதுமானதாக இல்லை. எங்கள் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் மாதம் ஒருமுறை அல்லது இருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. இதைசரி செய்யும் பொருட்டு வாரம் இரண்டு முறை குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post செங்கோட்டை புதூர் பேரூராட்சியில் குடிநீர் சீராக வழங்க கோரி பொதுமக்கள் காலிகுடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு appeared first on Dinakaran.