குடும்ப உறவை கடந்து திவாகரனுடன் அரசியல் உறவு கிடையாது : டிடிவி தினகரன் பேட்டி

சென்னை : குடும்ப உறவை கடந்து திவாகரனுடன் அரசியல் உறவு கிடையாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தை தினகரன் துவங்கியதை நாங்கள் ஏற்கவில்லை என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று கூறியிருந்தார். மேலும் கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார், இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன் என்றும் திவாகரன் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளிடம் பேசிய டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியில் அண்ணா இல்லை என்று காழ்ப்புணர்ச்சியால் திவாகரன் பேசுகிறார் என்று கூறியுள்ளார். உறவு என்பது வேறு, கட்சி என்பது வேறு என்றும் கட்சியை தனிநபராக ஆட்டிப்படைக்க திவாகரன் நினைப்பதாகவும் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் செய்த திவாகரன், எஸ்.டி.எஸ் தனிக்கட்சி தொடங்கிய போது அவருடன் பணியாற்றினார் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மேலும் சசிகலா மீது காட்ட முடியாத கோபத்தை என் மீது திவாகரன் காட்டுகிறார், சசிகலாவை பற்றி திவாகரன் எப்படியெல்லாம் பேசினார் என்பது எனக்கு தெரியும் என அவர் தெரிவித்துள்ளார். பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை பார்க்காதவர் திவாகரன் என்றும், சசிகலாவை எதிர்க்க முடியாதவர்கள் என்னை எதிர்க்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். குடும்ப உறுப்பினர்களுக்கு மரியாதை அளிக்கிறேன் அதற்காக அவர்களுக்கு கட்டுப்பட முடியாது என டிடிவி தினகரன் கூறியுள்ளார். உறவினர்களிடம் அரசியல் பற்றி பேச முடியாது என்றும் கட்சி தொடர்பாக திவாகரனிடம் பேசியது கிடையாது என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: