சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட 4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

தஞ்சை: தஞ்சை மாநகராட்சி பள்ளியில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், 2ம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதி 5 சதவீதம் பேர் தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் தற்போது 21,513 பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி பயன்பாட்டால் உயிரிழப்பு இல்லை.தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 144 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை வந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஊரடங்குக்கு வாய்ப்பு இல்லை. சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட 4,308 பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: