சிவகாசி பகுதியில் பாதுகாப்பின்றி கற்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

 

சிவகாசி, ஜன. 26: சிவகாசி பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் டிப்பர் லாரிகளில் கற்கள் ஏற்றி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது. சிவகாசி பகுதியில் டிப்பர் லாரிகளில் சல்லி கற்கள், கிராவல் மணல் பாதுகாப்பின்றி ஏற்றி செல்கின்றனர். லாரிகளில் இருந்து கீழே சிதறும் கற்கள், மணலால் பாதசாரிகள், டூ வீலர்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கிரஷர் குவாரிகள் அதிகளவில் இயங்கி வருகிறது.

இங்கு உற்பத்தி செய்ய படும் சல்லி கற்கள், உடை கற்கள், எம் சான்ட் மணல் லாரிகளில் ஏற்றி செல்கின்றனர். இது போன்ற லாரிகளில் ஒரு நடையில் 3 யூனிட் வரை கற்கள், மணல் ஏற்றி செல்லும் வசதி உள்ளதால் பெரும்பாலானோர் டிப்பர் லாரிகளில் இதனை ஏற்றி செல்கின்றனர். மேலும் டிப்பர் லாரிகளில் பாடி மட்டத்தை விட கூடுதலாக கற்கள், மணல் ஏற்றி செல்கின்றனர். அவற்றை முறையாக தார்ப்பாய் கொண்டு மூடாமல் அப்படியே திறந்த வெளியில் கொண்டு செல்கின்றனர். ஒரே நடையில் அதிக அளவில் ஏற்றிச் சென்றால் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் ஒரு சில லாரி உரிமையாளர்கள் இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.

கூடுதலாக லோடு ஏற்றி செல்லும் லாரிகள் சாலைகளில் வேகமாக செல்லும் போது, கற்கள் சாலையில் மண் தூசியுடன் பறந்து வந்து விழுகிறது. இதனால் பின்னால் மற்றும் அருகில் செல்லும் வாகன ஓட்டிகள், நடந்து செல்வோர் தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. மேலும் சாலைகளில் கற்கள் பரவி தொடர்ச்சியாக வரும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமம் ஏற்படுகிறது. போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

இருப்பினும் பல நேரங்களில் போலீசார் பகுதிகள் வழியாக சென்று தப்பிவிடுகின்றனர். அதனால் இந்த லாரிகளின் இயக்கத்தை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் எனவும், உரிமையாளர்களுக்கு முறையாக அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும், விதிகளை மீறி இயங்கும், அதிக லோடு ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post சிவகாசி பகுதியில் பாதுகாப்பின்றி கற்கள் ஏற்றி வரும் டிப்பர் லாரிகள்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: