×

சிட் பண்டில் லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி செல்போன் கடை உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு

 

புதுச்சேரி, நவ. 8: புதுச்சேரி லாஸ்பேட்டை அசோக் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி(40). இவர் அண்ணா சாலையில் செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். வாடகை கடையில் இருந்த நிலையில், சொந்தமாக இடம் வாங்கி கடை திறக்க முடிவு செய்து இடம் பார்த்து வந்துள்ளார். அப்போது நெல்லித்தோப்பு சிமெண்ட் ரோடு ரயில்வே கேட் அருகே உள்ள சிட் பண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் பிலோமினா என்பவர், சுந்தரமூர்த்தியை அணுகி, 20 மாதம் சிட்பண்டில் சீட்டு கட்டினால் பெரிய லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து ரூ.50 லட்சத்திற்கான சீட்டு தொடங்க உள்ளோம், இதில் சேர்ந்தால் 2வது மாதமே முழு தொகையும் தந்து விடுவதாக பிலோமினா கூறியுள்ளார். இதனை நம்பி சுந்தரமூர்த்தியும் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், சீட்டு கட்டி வந்தார். 2வது தவணை கட்டும்போது, முழு தொகையும் வேண்டும் என சுந்தரமூர்த்தி கேட்டுள்ளார். ஆனால் ஏலத்தில் வேறு ஒருவர் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு இருப்பதால், அவருக்கு ஒதுக்கி விட்டோம், அடுத்த மாதத்தில் தந்து விடுவதாக பிலோமினா உறுதி அளித்தார்.

இதை தொடர்ந்து சுந்தரமூர்த்தி மாதந்தோறும் ஏலத்தில் பணம் கேட்கும்போது, பிலோமினா தட்டி கழித்து வந்துள்ளார். 20 மாதம் முழுவதும் கட்டினால் கடைசி தவணையில் ரூ.50 லட்சம் வரும் என பிலோமினா ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி சுந்தரமூர்த்தியும் 20 மாதமும் பணத்தை கட்டி வந்துள்ளார். கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசி தவணையை கழித்துவிட்டு, அசல் தொகையை கொடுக்குமாறு சுந்தரமூர்த்தி கேட்டுள்ளார்.

அப்போது பிலோமினா நாளை தருகிறேன் என்று கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார். பின்னர் பிலோமினா, சுந்தரமூர்த்தியை நெல்லித்தோப்பில் உள்ள அலுவலகத்துக்கு வந்து பணத்தை பெற்று கொண்டு செல்மாறு கூறினார். இதை நம்பி சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் நெல்லித்தோப்பு அலுவலகத்துக்கு சென்றுள்ளார். அப்போது அலுவலகத்தில் பிலோமினா, அவரது கணவர் ஜான் பியர் மற்றும் மணி ஆகியோர், தங்களுக்கு அரசியல்வாதிகளை தெரியும்.

பணம் கேட்டு மீண்டும் வந்தால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தனர். அவரது கணவர் மற்றும் மணி ஆகியோர் சுந்தரமூர்த்தியை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து இச்சம்பவம் குறித்து சுந்தரமூரத்தி, முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பிலோமினா, அவரது கணவர் ஜான்பியர் மற்றும் மணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிட் பண்டில் லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி செல்போன் கடை உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி; பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Sid Bundel ,Puducherry ,Puducherry Laspate Sundaramoorthy ,Assoc City ,Anna Road ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் சபாநாயகர் மீதான...