சிசிடிவி கேமராக்களுடன் ரூ.10 லட்சத்தில் காஞ்சி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம்: கலெக்டர் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம் : கோவில் நகரம், சுற்றுலாத்தலம், பட்டு நகரமான காஞ்சிபுரத்தின் மையப்பகுதியில் பேரறிஞர் அண்ணா பஸ் நிலையம் உள்ளது. இங்கிருந்து ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பஸ் நிலைய பகுதியில் தொடர் நகை பறிப்பு, கஞ்சா கடத்தல் போன்ற குற்ற சம்பவங்கள் நடந்தன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடமும், எஸ்.பியிடமும் கோரிக்கை வைத்திருந்தனர்.  இதையடுத்து, கலெக்டர் ஆர்த்தி ஆலோசனைபடியும் எஸ்பி சுதாகர் உத்தரவின்பேரிலும் காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய புறக்காவல் நிலைய கட்டுமான பணி முடிந்து, 31 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. எஸ்பி சுதாகர் முன்னிலையில் கலெக்டர் ஆர்த்தி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர், அதிநவீன சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை துவக்கி வைத்து பார்வையிட்டார்.  அப்போது அவர், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட  காவல்துறையின்  செயல்பாடு வரவேற்கத்தக்கது’ என பாராட்டினார். இந்த புறக்காவல் நிலையத்தில்  ஒரு சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், 2 காவலர்களுடன் 3 ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால், மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் வினோத் சாந்தாராம் மற்றும் பலர் பங்கேற்றனர்….

The post சிசிடிவி கேமராக்களுடன் ரூ.10 லட்சத்தில் காஞ்சி பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம்: கலெக்டர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: