புதுடெல்லி: சீனாவில் பல மாதங்களாக சிக்கியுள்ள 2 இந்திய சரக்கு கப்பல் ஊழியர்களில் 23 பேர் மட்டும், வரும் 14ம் தேதி நாடு திரும்புகின்றனர். இந்தியாவை சேர்ந்த, ‘எம்பி ஜக் அனந்த்,’ சீனாவின் ஜிங்டாங் துறைமுகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில், மாலுமிகள் உட்பட 23 இந்திய ஊழியர்கள் இருக்கின்றனர். இதேபோல், ‘எம்வி அனஸ்தாசியா’ என்ற சரக்கு கப்பல் 16 ஊழியர்களுடன் கடந்தாண்டு செப்டம்பர் 20ம் தேதி முதல் கபிடியன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றில் இருந்து சரக்குகளை இறக்குவதற்கு அனுமதி கிடைக்காததால், ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
லடாக் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளதால், சீன அரசு இவர்களை வேண்டும் என்றே சிறை பிடித்து வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தது. அவர்களை திரும்பி அனுப்புவது தொடர்பாக, இருநாட்டு தூதரகங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் மன்சுக் மாண்டியா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எம்வி ஜக் அனந்த்’ கப்பல் சிபா நோக்கி பயணிக்க இருக்கிறது. அதில், இந்திய ஊழியர்கள் 23 பேர் ஜப்பானின் சிபா நோக்கி பயணிக்க இருக்கின்றனர். இவர்கள் 14ம் தேதி இந்தியா வந்து சேருவார்கள்,’ என கூறியுள்ளார். அதே நேரம், மற்றொரு கப்பலின் ஊழியர்கள் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.