கோபி அருகே ரூ.20 ஆயிரத்தில் முதியவர் சடலம் அடக்கம் செய்ய தற்காலிக பாலம் அமைத்த மக்கள்: மாஜி அமைச்சரின் வாக்குறுதி பொய்த்ததால் அவலம்

கோபி: கோபி அருகே ஓடையில் தண்ணீர் செல்வதால், சடலத்தை அடக்கம் செய்யமுடியாமல் தவிக்கும் மக்கள் ரூ.20 ஆயிரம் செலவில் தடுப்பணை அமைத்து சடலத்தை சுமந்து சென்றனர். மாஜி அமைச்சர் செங்கோட்டையன் வாக்குறுதி நிறைவேறாததால், அப்பகுதி மக்கள் அவலம் தொடர்கிறது. ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள சாணார் பதியில் 150 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கான மயானமானது தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் கீரிப்பள்ளம் ஓடைக்கு இடையே உள்ளது. ஓடைக்கு மேல் சுமார் 4 அடி உயரத்தில் தரை மட்ட பாலம் கட்டப்பட்டு இருந்தது. 10 ஆண்டுக்கு முன் அப்போதைய அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன்,  தரை பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டி தருவதாக கூறியதால், பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலத்திற்கு பூமி பூஜை  போடப்பட்டது. மூன்று முறை பூமி பூஜை போட்டும் இதுவரை பாலம் கட்ட எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால், சாணார்பதியில் யாரேனும் இறந்து விட்டால் அவரது உடலை சுமந்து கொண்டு, கீரிப்பள்ளம் ஓடையில்  சாக்கடை நீரில் இறங்கியே மயானத்திற்கு சென்று அடக்கம் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இப்பகுதியை சேர்ந்த முருகையன் (70) என்பவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். சடலத்துடன் மயானம்  செல்ல முயன்ற போது, கீரிப்பள்ளம் ஓடையில் அதிகளவு தண்ணீர் சென்றதால் அடக்கம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று காலை கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து  ரூ.20 ஆயிரம் செலவில் 60 அடி நீளத்திற்கு மூங்கிலால் ஆன தற்காலிக பாலம் அமைத்த பின் முருகையனின் சடலத்தை மயானத்திற்கு எடுத்துசென்று அடக்கம் செய்தனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் பாரியூர் கோயில் பூசாரிகள் குடும்பத்தினர் உட்பட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மயானத்திற்கு செல்லும் தரை மட்ட பாலத்தை உயர்த்தி தருவதாக வாக்குறுதி அளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பாலம் கட்டித்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வருடத்தில் மூன்று அல்லது நான்கு பேர் இறந்து போகும் நிலையில் மிகவும் சிரமத்துடனேயே உடலை அடக்கம் செய்து வருகிறோம். தற்போது, ஓடையிலும் அதிகளவில் தண்ணீர் செல்வதாலும், தடப்பள்ளி வாய்க்காலிலும் தண்ணீர் விடப்பட்டுள்ளதாலும் கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.  ஒவ்வொரு முறையும் இதே போன்று தற்காலிக பாலம் அமைத்தே மயானத்திற்கு சென்று வருகிறோம்,’’ என்றனர்….

The post கோபி அருகே ரூ.20 ஆயிரத்தில் முதியவர் சடலம் அடக்கம் செய்ய தற்காலிக பாலம் அமைத்த மக்கள்: மாஜி அமைச்சரின் வாக்குறுதி பொய்த்ததால் அவலம் appeared first on Dinakaran.

Related Stories: