கும்மிடிப்பூண்டி, ஏப். 13: திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, மாதவரம், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈகுவர்பாளையம், சூரப்பூண்டி, சானாபுத்தூர், ஏடூர், எளாவூர் தலையாரிபாளையம், சுண்ணாம்புகுளம், ஓபசமுத்திரம், நத்தம், ஆத்துப்பாக்கம், வழுதலம்பேடு, தேர்வழி, ரெட்டம்பேடு, அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம், எடப்பாளையம், பன்பாக்கம், கவரப்பேட்டை, ஏ.என்.குப்பம், காரணி, மங்கலம், நெல்வாய், முக்கரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் ஒன்றிய செயலாளர்கள் மு.மணிபாலன், நா.பரிமளம், கி.வே.ஆனந்தகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் பொதுமக்கள் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை மேளதாளங்களுடன் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது சசிகாந்த் செந்தில் பேசியதாவது: கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 100 நாள் வேலை திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வந்தது. மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் நிதி உதவி, இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியுடன் ₹1 லட்சம் நிதி உதவி, இந்தியா முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு, இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பில் அந்தந்த மாநிலத்திற்கு உட்பட்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மாநிலங்களின் உண்மையான சுயாட்சி பெறுகிற வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத் திருத்தவும், உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்கவும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ₹10 லட்சம் வட்டி இல்லா கடன் வழங்கவும் முயற்சி செய்வேன் என பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இதற்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ, திமுக தகவல் தொழில் நுட்ப அணி மாநில இணை செயலாளர் சேகர், முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், திமுக மாவட்ட நிர்வாகிகள் பகலவன் உமா மகேஸ்வரி, ரவி, ரமேஷ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் துளசி நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார், ராஜேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
The post கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் தேர்தல் பிரசாரம் உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க முயற்சி செய்வேன்: காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்குறுதி appeared first on Dinakaran.