×

குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு

நாகர்கோவில், ஜூன் 18: குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு பணிகள் நடந்து வருகிறது என்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நாகர்கோவிலில் நேற்று நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் வரவேற்றார். குமரி மாவட்ட கலெக்டர் தர் தலைமை வகித்தார். நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்ட எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கியும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான லோகோ மற்றும் பாடல் ஆகியவற்றை வெளியிட்டும் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் குமரி மாவட்டத்தில் 17 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்று 2038 பேர் பரிசு பெறுகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், அரசு ஊழியர்கள், சிறப்பு பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்பினரும் இந்த போட்டிகளில் பங்கேற்று உள்ளனர். இதனை போன்று நமது மண்ணின் கலைகளையும் போற்றி பாதுகாக்கும் வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

குமரி மாவட்டத்தில் விளையாட்டை மேம்படுத்த கடையாலுமூட்டில் கால்பந்து மைதானம், ஆற்றூரில் வாள் சண்டை மைதானம், பரைக்கோட்டில் கபடி அரங்கம், பேச்சிப்பாறையில் மினி ஸ்டேடியம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனை போன்று ₹3 கோடி செலவில் குலசேகரம் அருகே ஐந்து ஏக்கர் பரப்பில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் வரும் ஆண்டுகளில் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவஹர், மாமன்ற உறுப்பினர்கள் கலாராணி, கவுசிகா, காரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆனந்த், மாவட்ட உடற்கல்வி அலுவலர் நாராயணன், வக்கறிஞர் அகஸ்தீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மனோ தங்கராஜ் மேலும் கூறுகையில்,
● தெற்கு ஆசிய கூட்டமைப்புகள் நடத்தும் போட்டிகளில் பதக்கம் பெறும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம், தலா ரூ.3 லட்சம், தலா ரூ.2 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் இளம் வீரர்,வீராங்கனைகளுக்கு வெற்றியாளர்களுக்கான வளர்ச்சி திட்டத்தில் பயிற்சி மேற்கொள்ளவும், போட்டிகளில் பங்குபெறுவதற்கான செலவுத் தொகையாக R10 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
● தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10,000ம், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.13,000ம் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப ரூ.50 லட்சம் செலவில் நல்ல பயிற்சி மற்றும் தங்குமிட வசதியுடன் சத்தான உணவுடன் ஒரு நாளைக்கு ரூ.250 வீதம் சத்தான உணவு, உடைகள் மற்றும் காலணிகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவருகிறது.
● சட்டமன்ற தொகுதியில் மினி விளையாட்டரங்கம் ரூ.3 கோடியில் 6 முதல் 7 ஏக்கர் வரை தேவைப்படும் நிலையில் 200, 400 தடகள பாதை, கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, கோ-கோ, கபடி மற்றும் அலுவலக அறை, உபகரண இருப்பு அறை போன்றவை அமைக்கப்படும்.
● 2021-22 வரை முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் வெற்றியினை பெறுபவர்களுக்கு ரூ.1000, R750, R500 என்ற பரிசுத் தொகையினை மாற்றி தமிழ்நாடு முதலமைச்சர் R3000,R2000, R1000 என்ற பரிசுத்தொகையினை அறிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பரிசுத் தொகை மட்டுமே R42,08,000 வழங்கப்படவுள்ளது.

The post குமரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kumari district ,Nagercoil ,Dinakaran ,
× RELATED நாகர்கோவிலில் பேரிடர் மீட்பு ஒத்திகை 1600 மாணவர்கள் பங்கேற்பு