குப்பைக்கு போகும் பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தி கடல்பாசி உற்பத்தி செய்து காசாக்கும் மீனவர்கள்: கூலி வாங்காமல் சக மீனவர்களுக்கு உழைப்பை வழங்கும் அற்புதம்

ஸ்பிக் நகர்: தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்பாசி உற்பத்தி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாதாரணமாக குடித்துவிட்டு சாலைகளின் ஓரங்களில் தூக்கி எறியும் குளிர்பானம் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கொண்டு கடல்பாசியை உற்பத்தி செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் முதன்மையாக விளங்கும் தொழில்களில் கடல் தொழிலும் ஒன்று. இதில் கடல் பாசி உற்பத்தியும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடல் பாசிகளில் பல சத்தான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. 500 மில்லிகிராம் கடல் பாசி 1 கிலோ காய்கறிக்கு சமம் என்று கூறப்படுகிறது. கடல் பாசியில் பிஸ்கெட், சாக்லெட், முறுக்கு, சேமியா, அப்பளம், லட்டு, குளிர்பானங்கள், மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் மாத்திரைகளை கொண்டு புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய், மூட்டுவலி, இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கான மருந்துகள் தயாராகிறது. தூத்துக்குடி துறைமுகம் கடற்கரையில் இருந்து முள்ளக்காடு கோவளம் கடற்கரை வரையிலான பகுதிகளில் கடல்பாசி உற்பத்தி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறனர். கடல் பாசி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், நீளமான பிளாஸ்டிக் கயிற்றில் ஒரு முழம் அளவிற்கு சிறிய முடிச்சுகளாகப் போட்டு 100 கிராம் அளவிலான கடல்பாசிகளை கட்டுகின்றனர். கடல்பாசியை கட்டிய பிறகு கயிற்றின் எடை 18 கிலோவை அடைகிறது. இந்த கயிறு கடல் நீரில் மிதப்பதற்கு ஏற்றவாறு மூடப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் கயிறுகளில் கட்டப்படுகின்றன. தொடர்ந்து சிறிய மிதவைகள் மூலம் கடலில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு போய் போடப்படுகிறது.பின்னர் பெரியவகை கயிறு மூலம் கடலில் போடப்பட்டுள்ள நங்கூரத்தில் கட்டப்படுகிறது. 30 நாட்கள் பாசிகள் கடலிலேயே கிடந்து வளர்ச்சியடைகிறது. 30 நாட்களுக்கு பிறகு அந்த கயிறுகள் பாசிகளோடு கரைக்கு கொண்டு வரப்படுகிறது. 100 கிராம் அளவு கட்டப்பட்ட பாசிகள், 2 கிலோ வரை வளர்ச்சியடைகிறது. 30 நாட்களில் 1 கயிற்றில் கட்டப்பட்ட பாசிகள் சுமார் 100 கிலோ எடையை எட்டுகின்றன. இவ்வாறு கொண்டு வரப்பட்ட பாசிகளை நேரடியாக விற்பனை செய்தால் கிலோ ரூ.12 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதையே இரண்டு மூன்று நாட்கள் காய வைத்தால், அதன் எடை 4 மடங்கு குறைந்து விடுகிறது. இவை விற்பனை செய்யும்போது கிலோ ரூ.60 வரை விற்பனையாகிறது. சாதாரணமாக குளிர்பானங்கள் மற்றம் தண்ணீர் பாட்டில்களை குடித்துவிட்டு பலர் சாலைகளின் ஓரத்தில் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிடுகின்றனர். அவ்வாறு வீசி எறியப்பட்ட பாட்டில்களை கொண்டு ஆரோக்கியமான கடல்பாசி தயாரிப்பில் மீனவர்கள் ஈடுபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. எந்த ஒரு வேலையை செய்தாலும் சம்பளத்தை எதிர்பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த பணியில் ஈடுபடும் மீனவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்யாமல் உழைப்பை கொடுத்து உழைப்பை வாங்கி வருகிறார்கள். இன்று ஒருவர் போட்டுள்ள கயிறுகளை எடுக்க வேண்டும் என்றால் சக மீனவர்கள் அவருக்கு உதவிக்கு சென்று விடுவார்கள். அடுத்தநாள் இவர், மற்றொரு மீனவருக்கு உதவி செய்ய சென்று விடுவார். அவ்வாறு செல்லும்போது சம்பளம் பெறுவதில்லை. இந்த காலத்திலும் இந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.கடலில் பல்வேறு வண்ணங்களில் பாட்டில்கள் மிதப்பதை கரையில் இருந்து பார்க்கும்போது அழகிய வண்ணங்களில் பறவைகள் தண்ணீரில் மிதப்பது போன்று காட்சியளிக்கிறது.  கடல்பாசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள முருகன் கூறுகையில், தினமும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை செய்வோம். இது உணவுப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கடல்பாசிகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபரிகள் வாங்கிச் செல்கின்றனர். இதனுடைய தேவை அதிகரித்துள்ளதால் விற்பனையில் தேக்கம் ஏற்படாது. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை உள்ளிட்ட காலங்களில் கடல்பாசியின் உற்பத்தி குறைவாக இருக்கும், என்றார்….

The post குப்பைக்கு போகும் பிளாஸ்டிக் பாட்டிலை பயன்படுத்தி கடல்பாசி உற்பத்தி செய்து காசாக்கும் மீனவர்கள்: கூலி வாங்காமல் சக மீனவர்களுக்கு உழைப்பை வழங்கும் அற்புதம் appeared first on Dinakaran.

Related Stories: