திருவொற்றியூர்: குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நடத்துவதற்காக தொடர்ந்து லஞ்சம் கேட்டு அதிகாரிகள் டார்ச்சர் செய்ததால் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எண்ணூரில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 1வது தெருவை சேர்ந்தவர் விக்ரம் (30). தொழிலதிபர். இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு கடந்த மாதம் திருமணம் நடந்தது. விக்ரம், மணலி அருகே விச்சூரில் கடந்த 2019 அக்டோபர் மாதம் ரூ.60 லட்சம் முதலீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்கினார். இதற்காக, மின் வாரியத்தில் ஓய்வு பெற்ற, தனது தாய் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் கடன் வாங்கியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல், சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்குவதற்காக அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தபோது பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்டு பெற்றுள்ளனர். இந்நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதற்கு பிறகு, ஊரடங்கு தளர்வில் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் விக்ரம் தொடங்கினார். அப்போதும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து நடத்த அப்பகுதியை சேர்ந்த வருவாய் துறை உயரதிகாரிகள், கிராம அலுவலர், மின்வாரிய அதிகாரிகள், தொழில்துறை அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள் உள்பட பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் லஞ்சம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அவரும், வேறு வழியின்றி பல லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுத்துள்ளார். இது தவிர, உள்ளூர் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர்கள், அரசியல் பிரமுகர்களும் அடிக்கடி லஞ்சம் பணம் கேட்டு மிரட்டி வாங்கியுள்ளனர்.அதிக முதலீடு செய்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தொடங்கி விட்டதால் வேறு வழியின்றி, சுத்திகரிப்பு நிலைய வருமானத்தில் இருந்து பெரும் பகுதியை லஞ்சமாகவே கொடுத்துள்ளார். தொடர்ந்து லஞ்சம் கேட்டு நச்சரித்துள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் சுத்திகரிப்பு நிலையத்தை நடத்த முடியாது என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விக்ரம் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால், வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார் விக்ரம். கடந்த 12ம் தேதி லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர் பற்றிய விவரங்களை பட்டியலிட்டு சுத்திகரிப்பு நிலையம் நடத்த முடியாமல் தவிப்பதை உருக்கமுடன் குறிப்பிட்டு, ‘தனது இறுதி கடிதம் இது’ என்று முதல்வரின் தனிப்பிரிவு, காவல்துறை அதிகாரிகள் என பலருக்கும் இமெயில் மூலம் புகார் அனுப்பியுள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் நேற்று காலை மனைவியிடம், ‘வெளியே சென்று விட்டு வருகிறேன்’ என்று கூறி சென்றார் விக்ரம். அதற்கு பிறகு வீடு திரும்பவில்லை. இந்நிலையில் எண்ணூர் தாழங்குப்பத்தில் உள்ள பயன்படுத்தப்படாத பொது கழிவறையில் விக்ரம் தூக்கிட்டு பிணமாக கிடந்தார். அங்கு வந்தவர்கள், உடலை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….
The post குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் நடத்துவதற்காக தொடர்ந்து லஞ்சம் கேட்டு அதிகாரிகள் டார்ச்சர் தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை: எண்ணூரில் பரபரப்பு appeared first on Dinakaran.