கோவை : கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனராக உள்ளவர் உமா சக்தி. சவுரிபாளையம் ரோடு கிருஷ்ணா வீதியில் இவர் தனது சொந்த காரில் சென்று கொண்டிருந்த போது கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். அப்போது, காரில் 28.35 லட்சம் ரூபாய் இருந்தது. இந்த பணத்திற்கான ஆதாரங்களை போலீசார் கேட்ட போது, அவரால் உரிய பதில் சொல்ல முடியவில்லை. இவரது கட்டுப்பாட்டில் கோவை, நீலகிரி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், மாவட்ட, மாநில எல்லை செக்போஸ்ட்கள் வருகின்றன.இங்கு ஆய்வு பணிக்காக சென்ற உமா சக்தி, முறைகேடாக பணம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளர் செல்வராஜ் என்பவரின் மூலமாக பணம் வசூலித்து அதை காரில் வைத்து வீட்டிற்கு கொண்டு சென்ற போது போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். இது தொடர்பாக, போலீசார் உமா சக்தி, செல்வராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.போலீசார் இவரிடம் விசாரித்த போது இவர் எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்து விட்டார். இவரது அலுவலகம் மற்றும் வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது பல்வேறு சொத்து பத்திரங்கள், ஆவணங்கள் கிடைத்தது. இதில் இவர், வருமானத்திற்கு அதிகமாக ெசாத்து வாங்கி குவித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உமா சக்தி மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் இருப்பதாக தெரிகிறது. இந்த ஆவணங்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், போக்குவரத்து துறை ஆணையர் மற்றும் செயலாளர் அலுவலக அதிகாரிகள் உமா சக்தியின் விதிமுறை மீறல் வசூல் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடக்கிறது. விரைவில் இவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என கூறப்படுகிறது. இவருக்கு பணம் கொடுத்த வட்டார ேபாக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தொடர்பாகவும் புகார் பெறப்பட்டுள்ளது. இவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் வரி, லைசென்ஸ், எப்.சி போன்றவற்றிக்கும், மோட்டார் வாகனங்களுக்கு இழப்பீடு ெதாடர்பான அனுமதி போன்றவற்றிக்கும் பணம் பெறப்பட்டு வருவதாக தெரிகிறது. தினமும் பல லட்சம் ரூபாய் வசூல் வேட்டை நடத்தி அதை பல்வேறு மட்டத்தில் உள்ள போக்குவரத்து அலுவலர்கள் சிலர் பங்கு போடுவதாக தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் வசூல் வேட்டை அதிகாரி மாட்டியதால், கீழ் மட்ட அலுவலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்….
The post காரில் ரூ.28.35 லட்சத்துடன் சிக்கிய கோவை சரக போக்குவரத்து இணை கமிஷனருக்கு பல கோடி ரூபாய் சொத்து?பத்திரம், ஆவணங்கள் சேகரிப்பு; விரைவில் சஸ்பெண்ட் ஆகிறார் appeared first on Dinakaran.