கள்ளக்குறிச்சி: சின்னசேலம் தனியார் பள்ளியில் பலியான மாணவியின் உடல் மறுபரிசோதனை செய்யப்பட்ட பின்னரும், உடலை வாங்க பெற்றோர் வரவில்லை. உச்சநீதிமன்றம் இன்று அளிக்கும் உத்தரவுக்காக அவர்கள் காத்திருப்பதால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு நீடிக்கிறது. கள்ளக்குச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி மதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். சின்னசேலம் போலீசார் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி தந்தை ராமலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை எனக்கூறி, சிபிசிஐடி விசாரணை நடத்தவும், மறு பிரேத பரிசோதனை நடத்தவும் கோரி தந்தை ராமலிங்கம், தாய் செல்வி, உறவினர்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தனர். இதற்கிடையே கடந்த 17ம் தேதி சில அமைப்புகள் தனியார் பள்ளி வளாகத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர். பள்ளி பேருந்துகளை அடித்து நொறுக்கி சூறையாடியதோடு, தீ வைத்து எரித்தனர். மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தந்தை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அங்கும் மறு பிரேத பரிசோதனை நடத்த தடைவிதிக்கப்படவில்லை. அந்த மனு மீது இன்று விசாரணை நடக்க உள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை நடந்தது. வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டது. மறுபிரேத பரிசோதனை முடிந்தும் மாணவி மதியின் உடலை பெற்றுக்கொள்ளாத பெற்றோர், உச்சநீதிமன்றம் இன்று அளிக்க உள்ள உத்தரவுக்காக காத்திருக்கின்றனர். அந்த உத்தரவு வந்த பின்னரே மாணவியின் உடலை பெற்றுச்செல்வார்களா? என்பது தெரியும். இதனால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது. கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் பகுதியில் 5 ஐஜிக்கள், 10 எஸ்பிக்கள் உள்ளிட்ட 200 போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.சிபிசிஐடி 2வது நாள் விசாரணைமாணவி பலியான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி ஜியாஉல்ஹக் தலைமையில் நேற்று முன்தினம் சம்பவம் நடந்த தனியார் பள்ளியில் போலீசார் விசாரணையை தொடக்கினர். நேற்று 2வது நாளாக எஸ்பி ஜியாஉல்ஹக் போலீசாருடன் அந்த பள்ளி விடுதிக்கு சென்று மாணவி விழுந்த இடம், தங்கியிருந்த அறை ஆகியவற்றில் சுமார் ஒரு மணி நேரம் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.இறப்பதற்கு முன் மாணவி நடந்து சென்ற வீடியோ வைரல்சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த மாணவி மதி, சம்பவத்தன்று இரவு 9.30 மணிக்கு ஸ்டடி கிளாஸ் முடிந்து, விடுதிக்கு நல்ல முறையில் கையில் நோட்டு புத்தகத்துடன் நடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது 12ம் தேதி இரவு 9.30 மணிக்கு பிறகே அவர் இறந்துள்ளதாக தெரிகிறது. இந்த சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….
The post கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை முடிந்தும் மாணவி உடலை வாங்க மறுப்பு: உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் பெற்றோர் appeared first on Dinakaran.