களக்காடு அருகே பனை, தென்னை மரங்களை சாய்த்து ஒற்றை யானை தொடர் அட்டகாசம்-விவசாயிகள் வேதனை

களக்காடு : களக்காடு அருகே பனை, தென்னை மரங்களை சாய்த்து ஒற்றை யானை தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இங்குள்ள வன விலங்குகள் அடிக்கடி மலையடிவாரக் கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. கடந்த சில மாதங்களாக சிதம்பராபுரம், சத்திரங்காடு, தலையணை மலையடிவார பகுதியான கள்ளியாறு பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் காணப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்லாமல் மலையடிவார புதர்களில் தஞ்சமடைந்து இரவில் உணவுக்காக விளைநிலங்களுக்குள் புகுந்து வருகிறது. இதனிடையே சிதம்பரபுரம் சத்திரங்காடு பகுதியில் நுழைந்த ஒற்றை யானை அங்கிருந்த 3க்கும் மேற்பட்ட பனை மரங்களை சாய்த்து அதன் குருத்துகளை தின்றது. மேலும் அருகேயுள்ள தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்களையும் சாய்த்தது. அத்துடன் அங்கிருந்த பனம் பழங்களையும் தின்றது. யானை நாசம் செய்த பனை மரங்கள் சிதம்பரபுரத்தை சேர்ந்த விவசாயிகள் மகேஷ், செந்தில், சந்திரசேகர் ஆகியோருக்கு சொந்தமானது ஆகும். பல ஆண்டுகளாக வளர்த்து வந்த பனை, தென்னை மரங்களை நொடி பொழுதில் யானை சாய்த்ததை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். யானையின் தொடர் அட்டகாசத்தால் விவசாயிகள் பகல் நேரங்களில் கூட விளை நிலங்களுக்கு செல்ல முடியாமல் பீதியில் உள்ளனர்.உரிய இழப்பீடுஒற்றை யானையின் அட்டகாசம் குறித்து விவசாயி செந்தில் கூறுகையில், ‘யானையின் அட்டகாசத்தால் இப்பகுதியில் மட்டும் இதுவரை 20க்கும் மேற்பட்ட பனை மற்றும் தென்னை மரங்கள் சேதமடைந்துள்ளன. என்னைப் போன்ற விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. நாசமான பனை, தென்னை மரங்களுக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. யானையினால் உயிர் சேதம் ஏற்படும் முன் ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். மேலும் ஒற்றை யானையால்  சாய்த்து சேதமடைந்த தென்னை பனை மரங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்….

The post களக்காடு அருகே பனை, தென்னை மரங்களை சாய்த்து ஒற்றை யானை தொடர் அட்டகாசம்-விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: