×

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குமரியில் முதல் நாள் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்: பெண்கள் அதிக ஆர்வம்

நாகர்கோவில், ஜூலை 22 : குமரியில் கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்காக முதல் நாள் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. நேற்று 2 வது நாள் அதிகளவில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் செப்டம்பர் முதல் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று முன் தினம் (20ம்தேதி) தொடங்கியது. அந்தந்த ரேஷன் கடை பணியாளர் ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்கி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் மொத்தம் 400 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில் கூட்டுறவு சங்க கடைகள் 292 ஆகும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கடைகள் 82 ஆகும். மீன்வளத்துறை சங்க ரேஷன் கடைகள் 24 ஆகும். இது தவிர சுய உதவிக்குழு கடைகள் 2ம் உள்ளன. சுமார் 3 லட்சம் கார்டுகள் உள்ளன. இவற்றில் நேற்று முன் தினம் சுமார் 65 ஆயிரம் குடும்பங்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று 2 வது நாளாக விண்ணப்ப வினியோகம் நடந்தது. வீடு, வீடாக சென்று விண்ணப்பம், டோக்கனை ஊழியர்கள் வினியோகம் செய்தனர். ஊழியர்களுக்கு உதவியாக இளைஞர்களும் இதில் ஆர்வமாக ஈடுபட்டனர். பெண்கள் ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை பெற்று சென்றனர். விண்ணப்பத்துடன் வழங்கப்படும் டோக்கன்களில் டோக்கன் எண், விண்ணப்ப பதிவு நடக்கும் தேதி, நேரம், இடம், கடை எண், பெயர், அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், கிராமம், தெரு ஆகிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க வரும் 24ம் தேதி முதல் சிறப்பு முகாம் தொடங்க உள்ளது. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு டோக்கனில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து செல்ல வேண்டும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் 24ம் தேதி தொடங்குகிறது. இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய உள்ளனர். விண்ணப்ப பதிவு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெறும். இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5 முதல் 16 வரை வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் குமரியில் முதல் நாள் 65 ஆயிரம் விண்ணப்பங்கள் வினியோகம்: பெண்கள் அதிக ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு பணம்...