கரூர் வாங்கல் சாலையில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும்

 

கரூர்,பிப்.3: கரூர் வாங்கல் சாலை அரசு காலனி பிரிவு அருகே உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனி பிரிவு உள்ளது. கரூரில் இருந்து மின்னாம்பள்ளி, கோயம்பள்ளி, நெரூர், சோமூர், திருமுக்கூடலூர், வேடிச்சிபாளையம், கல்லுப்பாளையம் போன்ற பல்வேறு கிராம பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், பேரூந்துகளும் அரசு காலனி பிரிவை தாண்டி கிராமப்பகுதிகளை நோக்கிச் செல்கிறது. இதே போல், இந்த பிரிவுச் சாலையில் கரூரில் இருந்து வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனூர், சங்கரன்பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் செல்கிறது. அரசு காலனி பிரிவு அருகே மூன்று வழிப்போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை மையப்படுத்தி அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் செயல்படுகிறது. குடியிருப்புகளும், தனியார் பள்ளியும் செயல்படுகிறது. இதன் காரணமாக இந்த பிரிவுச் சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரவு நேரங்களில் இந்த பகுதியை கடந்து செல்லும் போது, போதிய வெளிச்சம் குறைவு காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்த பகுதியை வாகன ஓட்டிகள் பீதியுடன் கடந்து செல்லும் நிலையில் உள்ளனர். எனவே, இந்த பகுதியோரம் உயர்கோபுர மின் விளக்கு வசதி அமைத்து தர வேண்டும் பகுதியினர் பல மாதங்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு அனைவரின் நலன் கருதி உயர் கோபுர மின் விளக்கு வசதி அமைத்து தர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கரூர் வாங்கல் சாலையில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: