வந்தவாசி, நவ.29: செய்யாறு சிப்காட் விரிவாக்க பணியை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தி வந்தவாசி அருகே தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட் விரிவாக்கம் செய்யும் பணிக்காக செய்யாறு தாலுகா தேத்துரை உள்வட்டத்தில் குறும்பூர், நர்மாபள்ளம், காட்டுக்குடிசை, வடஆளப்பிறந்தான், தேத்துரை, மேல்நர்மா, வீரம்பாக்கம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,700 ஏக்கர் நிலங்களை அரசு கையப்படுத்தும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், பாமக, அதிமுக, பாஜக, நாதக உள்ளிட்ட பல கட்சியினரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், சிப்காட் அமைக்க வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பெண்கள் மேல்மா கூட்ரோடு அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, வந்தவாசி மற்றும் செய்யாறு பகுதிகளை சேர்ந்த பட்டதாரி வாலிபர்கள் 1,000 பைக்குகளில் சுமார் 60 கி.மீ. தூரம் பேரணியாக சென்று சிப்காட் விரிவாக்க பணியை விரைந்து செயல்படுத்த வலியுறுத்தினர்.
இந்நிலையில், வந்தவாசி அடுத்த மேல்மா கூட்ரோடு அருகே நேற்று தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கம், அருள்மிகு அம்மையப்பர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கே.வி.ராஜ்குமார் தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சாலையின் இருபுறமும் பந்தல்போட்டு அரைகிலோமீட்டர் தூரத்துக்கு உண்ணாவிரதம் அமர்ந்திருந்தனர். அப்போது, சிப்காட் விரிவாக்கம் பணியை விரைந்து நடத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், விவசாய சங்க நிர்வாகிகள் கோ.எதிரொலி மணியன், எம்.சி.சந்திரன், ஏழுமலை, தட்சணாமூர்த்தி, ராணி, மணியம்மைதேவன், வி.லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கீழ்நர்மா ரமேஷ், கீழ்கொடுங்காலூர் சங்கீதா குமார், பொன்னூர் புவனேஸ்வரி செல்வம், தென்தின்னலூர் சிவக்குமார், மீசநல்லூர் லட்சுபதி உட்பட பலர் கலந்து கொண்டு சிப்காட் விரிவாக்க திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். உண்ணாவிரத போராட்டத்தையொட்டி 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
The post கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் 15 ஆயிரம் பேர் பங்கேற்பு செய்யாறு சிப்காட் விரிவாக்க பணியை வலியுறுத்தி appeared first on Dinakaran.