அஞ்செட்டி- வண்ணாத்திப்பட்டி இடையே தொட்டல்லா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட கோரிக்கை

தேன்கனிக்கோட்டை : அஞ்செட்டி- வண்ணாத்திப்பட்டி இடையே தொட்டல்லா ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்ட வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேன்கனிக்கோட்டை தாலுக்கா காரண்டப்பள்ளி, அந்தேவனப்பள்ளி, சாலிவாரம், அருளாளம் உள்ளிட்ட பகுதியில் மழை காலத்தின்போது பெருக்கெடுக்கும் காட்டாறு அஞ்செட்டி மலையில் தொட்டல்லா என்ற பெயரில் பாய்கிறது. காவிரியின் உபநதியான இந்த ஆறு, அஞ்செட்டி- வண்ணாத்திப்பட்டி இடையே ஒகேனக்கல் காவிரியில் கலக்கிறது. கனமழை பெய்யும் சமயங்களில் தொட்டல்லாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அஞ்செட்டி- வண்ணாத்திப்பட்டி இடையே தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு செல்வதால் அஞ்செட்டியிலிருந்து தேன்கனிக்கோட்டைக்கும், தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டிக்கும் பஸ், லாரி, இரு சக்கர வாகனங்கள், பொதுமக்கள் யாரும் செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது.

போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படுவதால் நாள் கணக்கில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே, வண்ணாத்திப்பட்டி அருகே தொட்டல்லா ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டுமென பொதுமக்கள், விவசாயிகள்  நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் ஆண்டுதோறும் மழை காலங்களின்போது தொட்டல்லாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் வண்ணாத்திப்பட்டியில் தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: