கட்டுமான பணியில் ஈடுபட்டபோது 17வது மாடியிலிருந்து விழுந்த வடமாநில தொழிலாளி பலி

 

பெரம்பூர், ஜன.28: ஓட்டேரியில் கட்டுமான பணியில் ஈடுபட்டபோது 17வது மாடியில் இருந்து தவறி விழுந்த வட மாநில வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் உள்ள நார்த் டவுன் அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் புதிய அடுக்குமாடி கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை அந்த பகுதியில் 25வது டவர் பின்புறம் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் பிரீத் குமார் (26) என்பவர், 17வது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இவர், திடீரென தவறி கீழே விழுந்ததில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த ஓட்டேரி போலீசார் விரைந்து வந்து, வாலிபர் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது உடன் பணிபுரியும் வட மாநிலத்தவர்கள் ‘‘எங்களது ஒப்பந்ததாரர் வரவேண்டும். உயிரிழந்த நபருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அப்போதுதான் உடலை எடுக்க விடுவோம்,’’ என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கட்டுமான பணியில் ஈடுபட்டபோது 17வது மாடியிலிருந்து விழுந்த வடமாநில தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: