கடலில் நீரின் தன்மையை அறியும் மிதவை கருவி பராமரிப்பு பணிக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டது

புதுச்சேரி :  மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், கடல் நீரின் தன்மையை நிகழ் நேரத்தில் அறியும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரி அரசின் வேண்டுகோளுக்கு இணங்கி, இத்திட்டத்தை புதுவை மாநிலத்தில் செயல்படுத்துவதற்காக கடல் நீரின் தன்மையை அறியும் கருவிகள் பொருந்திய மிதவையை புதுவை துறைமுக பகுதியில் இருந்து சுமார் 4 கிமீ தூரத்தில் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் கடலில் கடந்த ஜூலை மாதம் நிறுவியது. அன்று முதல் புதுவை கடலோர பகுதி நீரின் தன்மையும், காற்றின் தன்மை உட்பட பல தகவல்களை 10 நிமிடத்திற்கு ஒரு முறை இந்த மிதவை கருவி அனுப்பி வந்தது. இதனை தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் இணையதளத்தின் மூலம் பார்த்து வந்தனர். இந்நிலையில் கடலில் நிறுவப்பட்ட மிதவை கருவி சில மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் தகவல்கள் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, மிதவை கருவியை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பேரில், தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய குழுவினர் நேற்று புதுவை வந்தனர். பின்னர், அவர்கள் கடலுக்கு சென்று சேதமடைந்திருந்த மிதவை கருவியை பராமரிப்பு பணிக்காக தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கிருந்து வாகனம் மூலம் மிதவை கருவியை சென்னைக்கு கொண்டு சென்றனர். 2 வார காலத்திற்குள் கருவியை சரி செய்ததும், மீண்டும் அக்கருவியை புதுவைக்கு கொண்டு வந்து கடலில் மிதக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்….

The post கடலில் நீரின் தன்மையை அறியும் மிதவை கருவி பராமரிப்பு பணிக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Related Stories: