கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் புதிய தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உறுதி

 

மதுரை, ஆக. 8: தென்மண்டலத்தில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று புதிய ஐஜி நரேந்திரன் நாயர் தெரிவித்தார். தென்மண்டல ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக மதுரை நகர் போலீஸ் கமிஷனரான நரேந்திரன் நாயர், தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று தென்மண்டல ஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்புகளை இவரிடம் ஐஜி அஸ்ரா கார்க் ஒப்படைத்தார்.பின்னர் புதிய ஐஜி நரேந்திரன் நாயர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தென்மண்டலத்தில் ஐஜியாக இருந்த அஸ்ரா கார்க் கடந்த ஒன்றரை ஆண்டாக, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

குறிப்பாக கஞ்சா ஒழிப்பில் அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடரும். இதற்கென தேவையான கூடுதல் தனிப்படைகள் அமைத்து, நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்’’ என்றார். மதுரைக்கு புதிய போலீஸ் கமிஷனர் வரும் வரையிலும் நகர் போலீஸ் கமிஷனர் பொறுப்பையும் நரேந்திரன் நாயர் கூடுதலாக கவனிக்கிறார்.தென்மண்டல ஐஜியாக பொறுப்பேற்றுள்ள நரேந்திரன் நாயர் (44). கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரி.

2005ல் ஐபிஎஸ் தேர்வாகி, தொடர்ந்து ஈரோடு, வந்தவாசி, கடலூர், தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், திருவனந்தபுரம், கோவை, சென்னை போன்ற இடங்களிலும், முன்னாள் தமிழக ஆளுநர் ரோசையாவுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார். கடந்த ஜனவரியில் மதுரை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றார். தற்போது, தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டு, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

The post கஞ்சா ஒழிப்பு நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் புதிய தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் உறுதி appeared first on Dinakaran.

Related Stories: