இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் சுட்டெரிக்கும் வெயில் 3 மடங்கு அதிகரிக்கும்: ஆய்வறிக்கையில் எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு அதிகரிக்க கூடும் என்று அமெரிக்க ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. `ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியான, அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகம் நடத்திய வெப்ப மயமாதல் தொடர்பான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலக வெப்பமயமாதல் 1.5 முதல் 2.0 டிகிரி வரை குறைந்தாலும், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 2.7 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், அதிக பயிர் விளைச்சல் கொண்ட உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகக் கூடும். அதே போல், கடற்கரை பிராந்தியங்கள் மற்றும் கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களிலும் இதே போன்ற பாதிப்பு ஏற்படக் கூடும்.

வெப்பமயமாதலை எந்தளவு தவிர்க்க, குறைக்க முடியுமோ அந்தளவுக்கு இதில் இருந்து விடுபட வாய்ப்புள்ளது. எனவே, இதற்கான மாற்று வழியை பயன்படுத்த முன்வர வேண்டும். 32 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் தொழிலாளர்கள் சோர்வடைந்து பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர். 35 டிகிரி செல்சியசை அடையும் போது, உடல் தன்னை தானே குளிர்ச்சிப்படுத்தி கொள்ளும் நிலையை கடந்து விடுவதால், மனிதன் உயிர் வாழ்வதே பிரச்னையாகி விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: