ஒன்றுபடுவோம்

தமிழகத்தில் கொரோனா 3-ம் அலை பரவாமல் தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அந்த அடிப்படையில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய மூன்று நாட்கள் தடை விதித்து, தமிழக அரசு கடந்த மாதம் 31-ம் தேதி உத்தரவிட்டது. அதாவது ஆக.1 முதல் ஆக.3 வரை இந்த தடை நீடித்தது. சென்னை வடபழனி கந்தக்கோட்டம் முருகன் கோயில், பாடி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர்கோயில், பழமுதிர்சோலை, ராமேஸ்வரம்  ராமநாத சுவாமி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தடை அமலுக்கு வந்தது. பழனி, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, திருத்தணி முருகன் கோயில்களிலும்  பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருச்சி ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்காவல், சமயபுரம் கோயில்களிலும் அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்ட் 2 அன்று ஆடி கிருத்திகை என்பதால் கோயில்களில் பக்தர்கள் குவிவது வழக்கம். ஆனால், தடை காரணமாக, முக்கிய கோயில்களில் பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டது. மறுநாள் ஆகஸ்ட் 3 அன்று ஆடிப்பெருக்கு என்பதால், கோயில்களை ஒட்டிய நீர்நிலைகளில் மக்கள் குவிவதை தடுக்க, புனித நீராடல் நிகழ்ச்சிக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் வழிபடவும், பரிகார பூஜை செய்ய முடியாமலும் கவலை அடைந்தனர். சில ஊர்களில் மக்கள் போராட்டங்களும் நடத்தினர். பல கோயில்களில் பக்தர்கள் வாசலில் நின்று, வணங்கிவிட்டு சென்றனர். கோயில்களில் முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால் உள்ளூர் மக்களும் ஏமாற்றம் அடைந்தனர். மக்கள் கூட்டம் அதிகளவு கூடினால், கொரோனா பரவலுக்கு மிக எளிதாக வழி வகுத்துவிடும், இது மூன்றாவது அலைக்கு சிவப்பு கம்பளம் விரித்தாற்போல் ஆகிவிடும் என்பதால், தமிழக அரசு உஷாராக செயல்பட்டு, இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை, பக்தர்களுக்கு கசப்பு மருந்தாக இருந்தாலும், கொரோனா பரவலை தடுக்க, இது முக்கியமான நடவடிக்கை என பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், பக்தர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு, கோயில்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு தமிழக அரசு மீண்டும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. பக்தர்கள் கூட்டம் அதிகளவில் கூடாமல் தடுத்து, முறைப்படி தரிசனம் செய்வதற்கு, வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வௌியிட்டுள்ளது. இதை பின்பற்றி, பக்தர்கள் நேற்று மீண்டும் தரிசனத்தை துவக்கினர். விலைமதிப்பற்ற மனித உயிர்களை காக்க, தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது மக்களின் கடமை. கொரோனா ஒழிப்பு பணிக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே, அதன் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். இல்லையேல், விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிடும். கொரோனா எதிர்ப்பு போராட்டம் என்பது இனி அரசின் கையில் இல்லை, மக்கள் கையில்தான் உள்ளது. நமக்கு சவால் விடும் பொது எதிரியை வீழ்த்த நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்….

The post ஒன்றுபடுவோம் appeared first on Dinakaran.

Related Stories: