ஏழைகளின் மெரினா என்றழைக்கப்படும் பூண்டி சதுரங்கப்பேட்டை பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

திருவள்ளூர்: சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்திய மூர்த்தி சாகர் நீர்த்தேக்கமாகும். அதோடு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராம மக்களுக்கு இது முக்கிய சுற்றுலாத்தலமாகவும், ஏழை, எளிய மக்களின் மெரினாவாகவும் திகழ்கிறது. இதனால் இந்த ஏரிக்கு சுற்றுலா பயணிகள் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். சுற்றுலா என்றால் சென்னையில் உள்ள மெரினா கடற்கரை போன்ற இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதுண்டு. ஆனால் ஏழை, எளிய மக்கள் சென்றுவர முடியாத சூழ்நிலை இருப்பதால் பூண்டி ஏரி மட்டுமே சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இந்நிலையில் பூண்டி சதுரங்கப்பேட்டை பகுதியில் உள்ள பூங்கா போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. பூண்டி ஏரிக்கு திருவள்ளூர் மாவட்டம் மட்டுமல்லாது சென்னை, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநில எல்லையில் இருந்தும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டியில் உள்ள சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தை பார்ப்பதற்காக சுற்றுலாவாக வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் ஓய்வெடுக்கவும், குழந்தைகள் விளையாடவும் அமைக்கப்பட்ட விளையாட்டு பூங்கா போதிய பராமரிப்பின்றி முள் செடிகள் வளர்ந்து உள்ளே செல்ல முடியாத அளவிற்கு புதர் போல காணப்படுகிறது. மேலும் விளையாட்டு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் மைதானம் போல் காட்சி அளிக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சதுரங்கப்பேட்டையில் உள்ள விளையாட்டு பூங்காவை சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஏழைகளின் மெரினா என்றழைக்கப்படும் பூண்டி சதுரங்கப்பேட்டை பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: